மும்பை, நவ.26
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் இணையவழி வர்த்தக நிறுவனங்கள் பண்டிகைக் கால விற்பனையின்போது 25 சத வளர்ச்சியைக் கண்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இது குறித்து ரெட்சீர் ஸ்ட்ராடிஜி கன்சல்டன்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த அக்டோபர் மாதத்தில் பண்டிகைக் கால விற்பனையின் போது நாட்டின் இணையவளி வர்த்தக நிறுவனங்கள் ரூ. 76,000 கோடி மதிப்பிலான பொருள்களை விற்றன. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் நடைபெற்ற விற்பனையைவிட ஆண்டு 25 சதம் அதிகமாகும். முன்னதாக, கடந்த அக்டோபரின் பண்டிகைக் காலத்தில் இணையவழி விற்பனையின் மதிப்பு ரூ.83,000 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது.
ஆனால், மொத்த வர்த்தக மதிப்பு அதை விட 8 முதல் 9 சதம் குறைவாக ரூ.76,000 கோடியாக உள்ளது. இருந்தாலும், முந்தைய ஆண்டைவிட விற்பனை 25 சதம் அதிகமாக உள்ளது ஆரோக்கியமான போக்கையே காட்டுகிறது.
பண்டிகைக் கால இணையவழி விற்பனையில், மிந்த்ரா, ஷாப்சி உள்ளிட்டவை அடங்கிய ஃப்ளிப்கார்ட் குழுமம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்தக் குழுமம் மட்டும் குறிப்பிட்ட காலகட்டத்தில் சுமார் ரூ.40,000 கோடிக்கு வர்த்தகம் மேற்கொண்டுள்ளது. ஃபிளிப்கார்ட்டைத் தொடர்ந்து, விற்பனையில் அமேஸான் 2வது இடத்தில் உள்ளது. மொத்த சந்தையில் அந்த நிறுவனம் 26 சத பங்கைப் பெற்றது.