November 29, 2022

கடந்த அக்டோபரில் சர்க்கரை உற்பத்தி சரிவு

புது தில்லி, நவ.3

இந்தியாவில், கடந்த அக்டோபர் மாதம் சர்க்கரை உற்பத்தி சரிவைக் கண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது குறித்து சர்க்கரை உற்பத்தி கூட்டுறவு சங்கமான என்எஃப்சிஎஸ்எஃப்எல் வெளியிட்டுள்ள அறிக்கையாளது:
2022-23ம் ஆண்டுக்கான சந்தைப் பருவகாலத்தின் முதல் மாதமான கடந்த அக்டோபரில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி 4.05 லட்சம் டன்னாக இருந்தது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 14.73 சதம் குறைவாகும்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்திய ஆலைகள் 4.75 லட்சம் டன் சர்க்கரையை உற்பத்தி செய்திருந்தன. மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் புதிய சர்க்கரை சந்தைப் பருவம் அக்டோபர் மாதத்தில் தொடங்கியது. உத்தரப்பிரதேசம் மற்றும் பிற கரும்பு உற்பத்தி மாநிலங்களில் கரும்பு அரைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும்.

மகாராஷ்டிரத்தில் சர்க்கரை உற்பத்தி நடப்பு சந்தைப் பருவத்தின் முதல் மாதமான அக்டோபரில் 80,000 டன்னாகக் குறைந்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் 1.40 லட்சம் டன்னாக இருந்தது. அதேபோல், மதிப்பீட்டு மாதத்தில் கர்நாடகம் 2.80 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்தது. இது, முந்தைய ஆண்டின் 3.10 லட்சம் டன் உற்பத்தியை விடக் குறைவாகும். இருப்பினும், தமிழகத்தில் சர்க்கரை உற்பத்தி இந்த சந்தைப் பருவத்தின் முதல் மாதமான அக்டோபரில் 45,000 டன்னாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் தமிழக சர்க்கரை உற்பத்தி 25,000 டன்னாக இருந்தது.

மேலும், 2021-22 சந்தைப் பருவத்தில் சர்க்கரை உற்பத்தி 3.59 கோடி டன்னாக இருந்தது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Spread the love