October 3, 2022

கடந்தாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 675 பில்லியன் டாலரைக் கடந்தது சான்பிரான்ஸிஸ்கோவில் அமைச்சர் கோயல் பேச்சு

சான்பிரான்ஸிஸ்கோ, செப்.6

கடந்தாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 675 பில்லியன் அமெரிக்க டாலரைக் கடந்ததுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ்கோயல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விரிவான செய்தியாவது:

இந்தியா என்பது வாய்ப்புகளைக் குறிப்பதாகவும், இது, இந்தியாவிற்கு உகந்த தசாப்தம் அல்ல, இந்தியாவிற்கான நூற்றாண்டு என்றும் மத்திய தொழில், வர்த்தகம், நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள ஸ்டான்ஃபோர்டு வணிக பட்டதாரி பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் உரையாடும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விரைவான மாற்றம் ஏற்பட்டு, பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து, அமைப்புமுறைகளை மேம்படுத்தி, தொழில்நுட்பம் சார்ந்த, உலகின் தலைசிறந்தவற்றிலிருந்து கற்றுக் கொள்ளும் வகையில் கடந்த சில ஆண்டுகளில் இந்தியா சிறந்த அடித்தளத்தை உருவாக்கி இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். இந்திய குடிமக்கள் அனைவரும் தரமான வாழ்க்கை மற்றும் வளமான எதிர்காலத்தைப் பெறுவதற்கு உரிமை உள்ளவர்கள் என்ற உறுதியை அளிப்பதற்காக நாடு கடுமையாக உழைத்து வருகிறது என்றார் அவர்.

மேலும், கடந்த நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 675 பில்லியன் அமெரிக்க டாலரைக் கடந்தது என்று குறிப்பிட்ட பியூஷ் கோயல், 2030-ஆம் ஆண்டிற்குள் சர்வதேச வர்த்தகத்தை 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவில் உயர்த்துவதை நாடு லட்சியமாகக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். தனது 100-வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும்போது 30 டிரில்லியன் அமெரிக்க டாலராக இந்தியாவின் பொருளாதாரம் இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சில தலைசிறந்த நிர்வாகக் கொள்கைகளின் அடிப்படையில் இந்தியாவின் எதிர்காலத்திற்கான தமது தொலைநோக்குப் பார்வையையும், திட்டங்களையும் வெளிப்படுத்தியதாக திரு கோயல் கூறினார். அந்த வகையில், மிக விலை உயர்ந்த எல்.இ.டி விளக்குகளை வாங்குவதற்கான மானியத்தைத் திரும்பப்பெறும் பிரதமரின் முடிவை, எல்.இ.டி விளக்குகளை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் முயற்சியில் முக்கிய தருணமாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், சான்பிரான்சிஸ்கோவில் மாற்றத்தை ஏற்படுத்தும் தொழில் முனைவோர்களை ஆதரித்தல் மற்றும் திறன் மேம்பாட்டு திட்டமான அமெரிக்காவின் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கிவைத்தார். இந்தியாவில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் அமெரிக்க முதலீட்டாளர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தலைவர்களை இணைக்கும் நோக்கில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிதி அளித்தல், சந்தைப்படுத்துதல் மற்றும் வர்த்தகமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உதவும் நோக்கிலும், இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்கவும் முதலீடு செய்யவும் விரும்பும், அமெரிக்கர்களுக்கான புவிசார் தடைகளை களையும் வகையில், எஸ்இடியு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், வர்த்தக முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களுடன் பல்வேறு கூட்டங்களில் அமைச்சர் கலந்து கொண்டு விவாதித்தார். இந்தியாவில் வர்த்தகம் புரிவது தொடர்பான வாய்ப்புகள் குறித்து வர்த்தக முதலீட்டாளர்களும், மற்ற முதலீட்டாளர்களும் கேட்டறிந்தனர்.

Spread the love