December 8, 2022

ஓசூரில் ஐபோன் தொழிற்சாலை
60,000 பேருக்கு வேலைவாய்ப்பு

ஓசூர், நவ.19

ஓசூர் அருகே, டாடா நிறுவனத்துடன் இணைந்து, ஐ போன் தொழிற்சாலை ஆரம்பிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதால், 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது: இந்தியாவில், பாக்ஸ்கான், பெகாட்ரான், விஸ்ட்ரான் போன்ற நிறுவனங்களால், ஆப்பிள் ஐ போன்’ இணைத்து உருவாக்கப்படுகிறது. ஐ போன் நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை தயாரித்து கொடுக்கும் வகையில், 5,000 கோடி ரூபாய் முதலீட்டில், 570 ஏக்கரில், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது.

இது, ஐ போன்’ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, உதிரி பாகங்கள் தயாரித்து கொடுக்கும் பணியை துவங்கியுள்ளது. தற்போது ஒரு பிளான்ட் துவங்கப்பட்டுள்ள நிலையில், 6,000 க்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதில், 85 சதவீதம் பேர் பெண்கள். மொத்தம், மூன்று பிளான்ட் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகிஉள்ளது.

இதன் வாயிலாக படிப்படியாக, 16 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், டாடா நிறுவனம் தனது விரிவாக்க திட்டத்தில், ‘ஐ போன்’ தயாரிக்கும் நிறுவனங்களுடன் இணைந்து, ‘ஐ போன்’ தயாரிப்பு தொழிற்சாலையை ஓசூர் அருகே துவக்க திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாக, தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுவர். உள்ளூர் மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love