February 3, 2023

ஏர் இந்தியா விமானங்களை புதுப்பிக்க ரூ.3,280 கோடி முதலீடு: டாடா சன்ஸ் தகவல்

புது தில்லி, டிச.9

ஏர் இந்தியா நிறுவனம், அதன் விமானங்களுடைய உட்புறத்தை புதுப்பிக்க, கிட்டத்தட்ட ரூ.3,280 கோடியை முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் நிறுவனம் கையகப்படுத்திய பின், பல்வேறு மாற்றங்களை அதில் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், விமானங்களின் கேபின் உட்புறத்தை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ரூ.3,280 கோடியை முதலீடு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விமானங்களில் புதிய தலைமுறை இருக்கை வசதிகள், நவீன பொழுதுபோக்கு சாதனங்கள், பிரீமியம் எக்கனாமி கேபின் என பல மாற்றங்களை செய்ய உள்ளது. மேலும், இதற்காக லண்டனை சேர்ந்த வடிவமைப்பு நிறுவனமான ஜெபிஏ டிசைன் அண்டு டிரண்டுவொர்க்ஸ் நிறுவனத்தை பணிக்கு அமர்த்தி உள்ளது. உட்புறத்தை மாற்றும் பணிகள் அனைத்தும் 2024ம் ஆண்டு மத்தியில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து, நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கேம்பெல் வில்சன் தெரிவித்துள்ளதாவது: முடிந்தவரை எவ்வளவு விரைவாக மறுசீரமைப்பு பணிகளை முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக முடிக்க, நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார். மேலும், குறைந்த பட்சம் 11 அகன்ற விமானங்களை, புதிய உட்புற வசதிகளுடன் குத்தகைக்கு எடுத்து, சேவையை விரிவுபடுத்த இருக்கிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஏர் இந்தியாவின் அடையாள சின்னமான மகாராஜா சின்னத்தையும் மாற்றும் முயற்சியிலும் இந்நிறுவனம் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love