மும்பை, டிச.6
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வழங்கியுள்ள வீட்டுக் கடன் அல்லாத தனி நபர் கடன் மதிப்பு ரூ.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வாடிக்கையாளர்களுக்கு வங்கி வழங்கியுள்ள, வீட்டுக் கடன் அல்லாத பிற வகை தனி நபர் கடன்களின் மதிப்பு 5 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. இதில் கடைசி ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் ஒதுக்கீட்டுக்கு 12 மாதங்கள் பிடித்தது. ஆனால் அதற்கு முந்தைய ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் ஒதுக்கீட்டுக்கு 15 மாதங்கள் ஆகின. அதற்கு முந்தைய ரூ.1 லட்சம் கோடிக்கு 30 மாதங்கள் ஆகின.
மேலும், மின்னணு வர்த்தக நடவடிக்கைகள் அதிகரித்து வருவதன் காரணமாக, கடன் வழங்கும் வேகமும் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வங்கி வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், தனது எம்சிஎல்ஆர் வகை கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.15 சதம் வரை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஓராண்டு பருவகாலம் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதம் 0.10 சதம் உயர்த்தப்பட்டு 8.05 சதமாகிறது. வீட்டுக் கடன், வாகனக் கடன், தனி நபர் கடன்கள் ஆகியவை பெரும்பாலும் இந்த வகையில்தான் அளிக்கப்படுகின்றன.