January 28, 2023

எலக்ட்ரிக் பைக் வாங்க வங்கிக் கடன் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் – ஐடிஎஃப்சி இடையே கூட்டு

சென்னை, நவ.23

இந்தியாவில் எலக்ட்ரிக் பைக் வாங்க கடன் வழங்கும் நடைமுறையை ஏத்தர் எனர்ஜி நிறுவனம், ஐடிஎஃப்சி வங்கியுடன் இணைந்து தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து வெளிவந்துள்ள செய்தியாவது: காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களின் பயன்பாட்டுக்கு அதிகரிக்க வேண்டும் என்று உலகம் முழுவதும் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் முக்கியப் பொது போக்குவரத்து முறைகளான பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்தை மின்சார முறைக்கு மாற்றும் பணிகள் நடைபெறுகிறது. சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் எரிபொருள் மூலம் இயங்கும் பேருந்துகளுக்கு பதிலாக மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகள் மாற்றப்பட்டு வருகிறது. ரயில்வே துறையை 100 சதம் மின்மயமாக்கலை நோக்கி பயணித்து வருகிறது.

இதற்கு அடுத்தபடியாக அதிக அளவு மாசை ஏற்படுத்தும் தனிநபர் வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்ற பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கெனவே எரிபொருள் மூலம் இயங்கும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு மாற்றாக தற்போது மின்சாரத்தால் இயங்கும் வாகனங்கள் வரத் தொடங்கிவிட்டன. எனவே, மின்சார வாகனங்கள் வாங்க வங்கிக் கடன் அளிக்க வேண்டும் சமீபத்தில் நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில், ரிசர்வ் வங்கி முன்னரிமைத் துறைக்கான கடன் வழிகாட்டுதல்களில் மின்சார வாகனங்களையும் சேர்ப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும், 2025ம் ஆண்டுக்குள் ரூ.40,000 கோடிக்கும், 2030-ம் ஆண்டுக்குள் ரூ.3.7 லட்சம் கோடி அளவுக்கும் மின்சார வாகனங்களுக்கு நிதியுதவி அளிக்கும் ஆற்றலை இந்தியாவில் உள்ள வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் பெற்றுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Spread the love