புது தில்லி, ஜன.17
தில்லி பெருநகரப் பகுதியிலுள்ள கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்று வரும் ஆட்டோ எக்ஸ்போ 2023 கண்காட்சியில், எத்தனாலில் இயங்கக் கூடிய தனது எக்ஸ்ஆர்இ 300 ரக மோட்டார் சைக்கிளை ஹோண்டா நிறுவனம் இடம் பெறச் செய்திருந்தது.
அந்தக் கண்காட்சியில், எத்தனால் எரிபொருளில் இயங்கக் கூடிய வாகனங்களுக்கான பிரத்யேக காட்சிப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் ஹோண்டாவின் எக்ஸ்ஆர்இ 300 ரக மோட்டார் சைக்கிள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. 291 சிசி கொள்ளவுடன் ஒற்றை என்ஜினைக் கொண்ட இந்த மோட்டார் சைக்கிள், எத்தனாலிலும், தேவைப்பட்டால் பெட்ரோலிலும் இயங்கக் கூடியது ஆகும். 7,500 ஆர்பிஎம்-மில் இந்த பைக் 25 யஹச்பி சக்தியை வெளிப்படுத்தும். மேலும், எத்தனாலில் இயங்கும்போது அதன் சக்தி 25.2 யஹச்பி-யாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தியாவின் மிகப் பெரிய வாகனக் கண்காட்சியான ஆட்டோ எக்ஸ்போ கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது.
16-வதாக நடைபெறும் இந்தக் கண்காட்சியில் மாருதி சுஸுகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், கியா இந்தியா, டொயோட்டா கிர்லோஸ்கர் போன்ற முன்னணி வாகன உற்பத்தி நிருவனங்கள் பங்கேற்றன. எனினும், இந்தக் கண்காட்சியில் ஹோண்டா நிறுவனம் பங்கேற்வில்லை. இருந்தபோதிலும், எத்தனால் வாகனங்களுக்கான பிரிவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களில், தனது எக்ஸ்ஆர்இ 300 ரக மோட்டார் சைக்கிளை ஹோண்டா நிறுவனம் இடம் பெறச் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.