December 8, 2022

ஊதியம் அல்லாத டிடிஎஸ் கணக்கு தாக்கலுக்கு நவ.30 வரை அவகாசம் நீட்டிப்பு: சிபிடிடி

புது தில்லி, அக்.28

ஊதியம் அல்லாத பரிவர்த்தனைகளுக்கான டிடிஎஸ் கணக்குத் தாக்கலுக்கு நவம்பர் 30-ஆம் தேதி வரை கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டுக்கான இந்த கணக்குத் தாக்கலுக்கு அக்டோபர் 31ம் தேதி கடைசி நாள் என்ற நிலையில், இப்போது ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: திருத்தியமைக்கப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட 26க்யூ படிவத்தின் வாயிலாக டிடிஎஸ் அறிக்கை தாக்கல் செய்வதில் நிலவும் சிரமங்கள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன. எனவே, 2022-23 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டுக்கான ஊதியம் அல்லாத பரிவர்த்தனைகளுக்கான டிடிஎஸ் கணக்கு தாக்கலுக்கு கெடு தேதி நவம்பர் 31 வரை நீட்டிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

26க்யூ படிவம் மூலம் டிடிஎஸ் கணக்கு தாக்கல் செய்வதில் பல்வேறு தொழில்நுட்பம்சார்ந்த இடையூறுகளை வரிசெலுத்துவோர் எதிர்கொண்டு வருகின்றனர். செலுத்துச்சீட்டு பொருந்தாமல் போவது, செலுத்துச்சீட்டு சரிபார்ப்பு நடைமுறை தோல்வியுறுவது உள்ளிட்ட பிரச்னைகளால் டிடிஎஸ் கணக்கு தாக்கல் செய்ய இயலாத நிலையை எதிர்கொண்டு வரும் சூழலில், வரிசெலுத்துவோருக்கு ஒருமாதம் அவகாசத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் அளித்துள்ளது.

Spread the love