October 3, 2022

உள்நாட்டில் முதலீடு செய்ய தயக்கம் காட்டுவது ஏன்
தொழில் துறையினருக்கு அமைச்சர் கேள்வி

புது தில்லி, செப்.14

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் நிலையில், இந்திய நிறுவனங்கள் தயங்குவது ஏன் என இந்திய தொழில் துறையினரிடம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது குறித்து ஹீரோ மைண்ட்மைன் அமைப்பின் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட நிர்மலா சீதாராமன், உற்பத்தித் துறையில் முதலீடு செய்ய இந்திய நிறுவனங்கள் காட்டி வரும் தயக்கம் குறித்து கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசு, இந்தியாவில் தொழில் வாய்ப்புகளை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்களை அறிவித்து வருகிறது. இவற்றால் ஈர்க்கப்பட்டு பல வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறி இந்தியாவை நோக்கி வருகின்றன. ஆனால், இந்தியாவில் இருக்கும் நிறுவனங்கள் உற்பத்தி துறையில் முதலீடு செய்ய தயங்குகின்றன என்று அவர் தெரிவித்தார்.

மேலும், பொருளாதார வளர்ச்சி சார்ந்து இந்தியா முன்னெடுத்து வரும் முயற்சிகள் குறித்து அவர் தெரிவிக்கையில், பல நாடுகள் இந்தியாவுடன் ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்ள விருப்பம் தெரிவிப்பதாக குறிப்பிட்டார். ஏற்றுமதி – இறக்குமதி தொடர்பான பணப்பரிவர்த்தனையை ரூபாயில் மேற்கொள்வது தொடர்பாக ஆர்பிஐயின் முன்னெடுப்பை அவர் பாராட்டினார். தற்போது இந்தியா அதன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை பெரும்பான்மையாக டாலரில் மேற்கொண்டு வருகிறது. இதனால், இறக்குமதி அதிகமாகும் சமயத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துவிடுகிறது. மேலும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி அடைகிறது. இது தவிர்த்து, அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா வர்த்தகத்தில் ஈடுபடுவதும் சிக்கல் நிறைந்ததாக உள்ளது என்றார்.

Spread the love