January 25, 2023

உலக பொருளாதாரத்தில் மீண்டெழ
இந்தியா முன்னிலை வகிக்க வேண்டும்: சந்திரசேகரன்

டாவோஸ், ஜன.19

கடந்த சில ஆண்டுகளாக இந்தியா வளர்ச்சியடைந்து வருவதால், உலக பொருளாதாரம் மீண்டெழ இந்தியா முன்னிலை வகிக்கும் நிலையில் உள்ளது என்று டாடா சன்ஸ் குழும தலைவர் என். சந்திரசேகரன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்று வரும் உலக பொருளாதார கூட்டமைப்பின் மாநாட்டில் இந்தியாவின் 10 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சிக்கான பாதை’ என்ற தலைப்பில் டாடா சன்ஸ் குழும தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவில் ஆண்டுதோறும் அதிகமான பட்டதாரிகள் படித்து வெளிவருவது இந்தியாவை வலுவான இடத்துக்கு கொண்டு செல்வதில் முக்கிய காரணியாகும். மேலும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு மேம்பட்டுள்ளது. இந்தியாவுக்கு தேவையான தடுப்பூசிகள் சொந்த நாட்டிலேயே உருவாக்கப்பட்டன. டிஜிட்டல் மயமாக்கலிலும் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டுள்ளது என்றார்.

எதிலும் வளர்ச்சிதான் முக்கியம். உலகம் பொருளாதாரம் மீண்டெழ வேண்டும். அதை விநியோக சங்கிலி மூலம் முன்னெடுக்கும் நிலையை இந்தியா பெற்றுள்ளது. சுகாதாரம், பொருளாதாரம், சுற்றுலா ஆகிய துறைகளில் உலகை வழிநடத்த இந்தியாவுக்கு மிகப்பெரிய வாய்ப்புள்ளது. தற்போது 1 கோடி சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருகை தருகிறார்கள். இதை 10 கோடியாக அதிகரிக்க திறன் உள்ளது. இதற்காக விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள், துறைமுகங்களின் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியது அவசியம். இதை அடுத்த 25 ஆண்டுகளில் செய்து முடிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Spread the love