December 9, 2022

உலகம் தீவிரமான உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது: சக்தி காந்த் தாஸ்

ஹைதாராபாத், நவ.21

கொரோனா பரவலின் மூன்றாவது அலையைக் கடந்து உலகப் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு வரவிருந்த சூழலில், திடீரென ஏற்பட்ட உக்ரைன்-ர´யா போரால் புதிய சவால்கள் எழுந்துள்ளன; இதனால், உலகம் தீவிரமான உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது’ என்று ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து ஆர்பிஐ ஆளுநர் தெரிவித்துள்ளதாவது: கொரோனா பரவல் பிரச்னை, பெரும் தரவுகளை ஆராய்ந்து, பயன்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்கியது. அதேபோல், கொள்கை உருவாக்கத்தில் பகுப்பாய்வு சிக்கல்கள் மற்றும் சவால்களுக்கு வழிவகுத்தது.

கொரோனா பேரிடரின் முதல் அலையின்போது, தரவு சேகரிப்பு மற்றும் புள்ளிவிவரங்களில் ஏற்பட்ட இடைவெளி முதன்மையான சவாலாக காணப்பட்டது. மிகவும் ஆபத்து நிறைந்ததாக இருந்த இரண்டாவது அலையில், கொள்கை ரீதியிலான தலையீட்டு முடிவுகளை மேற்கொள்வதற்கான துறைசார் தரவுகள் திரட்டுவது முக்கியப் பங்கு வகித்தது. அதன் பிறகான 3வது அலையின் தாக்கங்களில் இருந்து உலகப் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு வரவிருந்த சூழலில், ஐரோப்பிய கண்டத்தில் திடீரென ஏற்பட்ட போர், புதிய சவால்களைக் கொண்டுவந்துள்ளது. இதன் காரணமாக, உலகம் தீவிரமான உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

மேலும், அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்வும் விநியோகச் சங்கிலி பாதிப்பும் உலகளாவிய பணவீக்க அதிகரிப்புக்கு வழிவகுத்தது. கொரோனா பரவல், ஐரோப்பிய கண்டத்தில் ஏற்பட்டுள்ள போர், உலக நாடுகள் அனைத்திலும் நிதிசார் கொள்கைகளின் இருக்கம் ஆகிய 3 பெரும் நிகழ்வுகளால், கடந்த 2020, மார்ச்சிலிருந்து பொருளாதாரம் சார்ந்த ஆய்வுகளில் பல்வேறு விதமான சவால்கள் உருவாகியுள்ளன. மேற்கண்ட 3 சூழல்களின் தாக்கங்கள் நீடித்து வரும் நிலையில், அவற்றை எதிர்கொள்ளும் தயார் நிலையுடன் ஆர்பிஐயின் ஆராய்ச்சித் துறை இருக்க வேண்டும் என்றார் அவர்.

Spread the love