December 9, 2022

இளைஞர்கள் இந்தியாவை உலகளாவிய ஆற்றல் மையமாக
உருவாக்க வேண்டும்: அமைச்சர் சர்பானந்த சோனாவால்

சென்னை, நவ.5

இந்தியாவின் தொலைநோக்கு திட்டம் 2030, சாகர் மாலா, பிரதமரின் விரைவு சக்தி போன்ற மத்திய அரசின் திட்டங்களில் மாணவர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இந்தியாவில் உலகளாவிய ஆற்றல் மையமாக உருவாக்க வேண்டும் என்று மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னையை அடுத்த உத்தண்டியில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்று பட்டங்களை வழங்கினார். பிரதமரின் தொலைநோக்கு திட்டமான தற்சார்பு இந்தியா திட்டத்தை இந்திய கடல்சார் பல்கலைக்கழக மாணவர்கள் செயல்படுத்தி உலகளாவிய சமூகத்தை ஈர்க்க வேண்டும் என்று அமைச்சர் தமது பட்டமளிப்பு விழா உரையில் கேட்டுக்கொண்டார். தற்போதுள்ள உலக நிலைமையை பயன்படுத்தி சிறந்தவற்றுடன் போட்டியிடுவதோடு, நாம் தான் சிறந்தவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தியா உலக தலைமைத்துவம் பெறுவதற்கு இதுவே சரியான தருணம் என்றும் அவர் கூறினார்.

குவிந்து கிடக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி மாநிலங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இளைஞர் சக்தியை பயன்படுத்தி நாளைய உலகத்திற்கு இந்தியாவை தலைமை ஏற்க செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

ஆயுஷ் துறையின் வளர்ச்சி பற்றி பேசிய சர்பானந்த சோனாவால், 2014-ல் 3 பில்லியன் டாலராக இருந்த பாரம்பரிய மருந்துகளின் ஏற்றுமதி இப்போது 18.2 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என்றார். பாரம்பரிய மருந்துகளின் விரிவாக்க அலுவலகத்தை உலக சுகாதார நிறுவனம் இந்தியாவில் அமைக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விழாவில், பிஎச்டி, முதுநிலைப் பட்டம் உட்பட 400 பேருக்கு பட்டங்களை அமைச்சர் வழங்கினார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இப்பல்கலைக்கழக மையங்கள் மூலம் 3700 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

Spread the love