October 4, 2022

இலங்கைக்கு நிதியுதவி வழங்குவதில்
சீனாவை விஞ்சியது இந்தியா

புது தில்லி, செப்.20

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அண்டை நாடான இலங்கைக்கு இந்தியா 2022 தொடங்கியதில் இருந்து ஏப்ரல் 2022 வரை 968 மில்லியன் டாலர் கடனாகவும், நிதி உதவியாகவும் அளித்துள்ளது.
இது குறித்து விரிவான செய்தியாவது: 2017 முதல் 2021 வரை இலங்கையின் மிக முக்கிய நட்பு நாடாக சீனா இருந்து வந்தது. இலங்கைக்கு சீனா 947 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி விடுவித்தது. இதில் 809 மில்லியன் டாலர் சீன வளர்ச்சி வங்கி வாயிலாக கடனாக வழங்கப்பட்டது. சீனாவிடம் பெற்ற கடனை திருப்பியும் செலுத்த முடியாமல், வட்டியும் கட்ட முடியாமல் போனதுதான் இலங்கையின் நெருக்கடிக்குக் காரணம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில்தான் இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டத் தொடங்கியது. 2022 ஜனவரி தொடங்கி ஏப்ரல் 2022 வரை இந்தியா இலங்கைக்கு 968 மில்லியன் டாலர் அளவுக்கு உதவிகள் செய்துள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியானது 2021-ல் 610 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கியுள்ளது. இதிலும் இந்தியாவின் பங்களிப்பு 377 மில்லியன் டாலர் உள்ளது.

மேலும், இந்தியா சார்பில் இலங்கைக்கு கடந்த ஆகஸ்டில் இருந்து 21,000 டன் உரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதனை இலங்கையுடனான நட்புறவை வலுப்படுத்தும் செயல் என்று இலங்கைக்கான இந்திய தூதரகமும் தெரிவித்துள்ளது. இலங்கையை நிதி நெருக்கடியால் தனது கட்டுக்குள் வைத்து அதன் கடல் பரப்பை இந்தியாவுக்கு எதிரான ஒற்று வேலைகளுக்குப் பயன்படுத்த சீனா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில், இப்போது இலங்கையின் ஆபத்பாந்தவனாக இந்தியா மாறியிருக்கிறது.


Spread the love