January 21, 2023

இலங்கைக்கான ஐஎம்எஃப் கடனுதவி இந்தியா ஆதரவு தெரிவித்தது

புது தில்லி, ஜன.21

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) கடனுதவி வழங்குவதற்கான ஆதரவை இந்தியா தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் இலங்கைக்குக் கடன் வழங்கி உதவுவது தொடர்பாக உலக வங்கி, சர்வதேச நிதியம் ஆகிய பன்னாட்டு அமைப்புகள் ஆலோசித்து வருகின்றன. சர்வதேச நிதியத்தின் உதவியைப் பெற இலங்கைக்கு ஏற்கெனவே கடன் வழங்கியுள்ள நாடுகள் ஒப்புதல் அளிக்க வேண்டியது அவசியம்.

இந்நிலையில், வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது: இலங்கைக்கு இருதரப்பு ரீதியில் உரிய ஆதரவை வழங்க இந்தியா தயாராக உள்ளது. இலங்கையின் கடனை மறுகட்டமைப்பு செய்வது தொடர்பகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், அந்தப் பேச்சுவார்த்தையை ஐஎம்எஃப் முன்னின்று நடத்தி வருகிறது. மற்ற நாடுகளிடம் இருந்து கடனுதவிக்கான உறுதிப்பாட்டை ஐஎம்எஃப் கோரியுள்ளது. அந்த உறுதியை இந்தியா ஏற்கெனவே வழங்கியுள்ளது. அது தொடர்பான அதிகாரபூர்வ ஒப்புதல் சர்வதேச நிதியத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கையும் சர்வதேச நிதியத்துடன் இலங்கை நடத்தி வரும் பேச்சுவார்த்தையும் கடனுதவி ஒப்பந்தத்தை இறுதிசெய்யும் என நம்புகிறோம். இலங்கை விரைவில் நீடித்த நிதி மேலாண்மை சூழலுக்குத் திரும்பும் என்றும் நம்புகிறோம்” என்றார்.

Spread the love