December 8, 2022

இந்திய விமானப் போக்குவரத்து துறை நடப்பாண்டில் இழப்பை எதிர்நோக்கியுள்ளது

புது தில்லி, நவ.14

எரிபொருள் விலையேற்றம் போன்ற காரணங்களால் இந்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை இந்த நிதியாண்டில் பெரும் இழப்பை எதிர்நோக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான இக்ரா வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கொரோனா பேரிடரால் பெரும் சரிவைச் சந்தித்திருந்த உள்நாட்டுப் பயணிகள் விமானப் போக்குவரத்து, தற்போது அந்த சரிவிலிருந்து வெகு வேகமாக மீண்டு வருகிறது.

கடந்த அக்டோபர் மாதத்தில் உள்நாட்டு பயணிகள் போக்குவரத்து முந்தை ஆண்டின் அதே மாதத்தை விட 26 சதம் அதிகரித்து சுமார் 114 லட்சமாக இருந்தது. கடந்த ஆண்டில், இந்த எண்ணிக்கை வெறும் 90 லட்சமாக இருந்தது.

எனினும், கொரோனா நெருக்கடிக்கு முந்தைய 2019ம் ஆண்டின் அக்டோபா மாதத்திய பயணிகள் விமானப் போக்குவரத்து எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது கடந்த அக்டோபர் எண்ணிக்கை 8 சதம் குறைவாகவே உள்ளது. எரிபொருள் விலையேற்றம் மட்டுமின்றி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதும், விமான நிறுவனங்களின் வருவாயில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த நிதியாண்டில் பயணிகள் விமானப் போக்குவரத்தில் கணிசமான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். ஆனால் அதே வேளையில், இந்தத் துறையில் வருவாய் அதிகரிக்கும் வேகம் மந்தமாக இருக்கும். செலவுகள் அதிகரிப்பதால் இந்தத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் சுமார் ரூ.15,000 கோடி முதல் ரூ.17,000 கோடி வரை நிகர இழப்பை சந்திக்கும் அபாயம் உள்ளது. எனினும், முந்தைய நிதியாண்டில் மதிப்பிடப்பட்ட நிகர இழப்புடன் ஒப்பிடுகையில் இது குறைவாகும். இதற்கு பயணிகளின் போக்குவரத்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வளர்ச்சியடைந்து வருவதும், நிறுவனங்கள் வைத்துள்ள கடன் மீது வட்டி சுமை குறைக்கப்படுவதும் முக்கிய காரணங்களாக உள்ளன. நடப்பு நிதியாண்டில், உள்நாட்டு விமானப் போக்குவரத்தின் வளர்ச்சி கொரோனா நெருக்கடிக்கு முன்பிருந்ததைவிட சுமார் 30லிருந்து 35 சதம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love