November 29, 2022

இந்திய விமானப்படையில் நவீன விமானங்கள் அதிகளவில் சேர்ப்பது முக்கியது: வி.ஆர் சவுத்ரி

ஜோத்பூர், நவ.9

இந்திய விமானப்படையில் 4.5 தலைமுறை நவீன போர் விமானங்களை அதிகளவில் சேர்ப்பது மிக முக்கியம் என விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்சல் வி.ஆர்.சவுத்ரி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தியா, பிரான்ஸ் விமானப் படைகள் இணைந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கருடா-7 என்ற பெயரில் கடந்த மாதம் 26ம் தேதி இருதரப்பு கூட்டுப் பயிற்சியை தொடங்கியுள்ளது. இந்த பயிற்சியில் இந்திய விமானப்படையின் ரஃபேல், தேஜஸ், ஜாகுவார் மற்றும் சுகோய் ரக போர் விமானங்கள் பங்கேற்றுள்ளன.

இதற்கிடையே பிரான்ஸ் விமானப்படை தளபதி ஜெனரல் ஸ்டீபன் மிலே இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தில்லியில், இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்சல் வி.ஆர்.சவுத்ரியை சந்திந்து இருதரப்பு ராணுவ உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸோ நிறுவன தயாரிப்பான ரஃபேல் போர் விமானத்தில் விமானப்படை தளபதி சவுத்ரியும், ரஷ்ய தயாரிப்பு சுகோய் போர்விமானத்தில் பிரான்ஸ் விமானப்படை தளபதி ஸ்டீபன் மிலேவும் பறந்தனர்.

பின்னர் சவுத்ரி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: பிரான்ஸ் விமானப்படையிலும் ரஃபேல் போர் விமானங்கள் உள்ளன. நாமும் ரஃபேல் போர் விமானத்தை பயன்படுத்துகிறோம். நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படுவது முக்கியம். நமது விமானப்படையில் 4.5 தலைமுறையைச் சேர்ந்த நவீன போர் விமானங்களை சேர்ப்பது மிக முக்கியம் என்று தெரிவித்தார். விமானப்படையின் உடனடித் தேவைகளை சந்திக்க இந்த வகை விமானங்களின் 5 அல்லது 6 படைப்பிரிவுகள் தேவை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Spread the love