December 8, 2022

இந்திய டிவி சேனல்கள் வெளிநாட்டு செயற்கைக்கோளை
பயன்படுத்துவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை

புது தில்லி, அக்.29

சேட்டிலைட் டிவி சேனல் ஒளிபரப்பு தொடர்பான செயற்கைக்கோள் கட்டுப்பாடுகளை இன்னும் ஒரு மாதத்தில் தளர்த்த இருப்பதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை செயலாளர் அபூர்வ சந்திரா தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

டிவி சேனல்கள் தங்களின் சிக்னல்களை செயற்கைக்கோள்களுக்கு அனுப்பி, அங்கிருந்து சிக்னலை பெற்று நாடு முழுவதும் ஒளிபரப்பி வருகின்றன. இவ்வாறு சிக்னல் அனுப்புவது அப்லிங்கிங்’ என்றும், செயற்கைகோளில் இருந்து சிக்னல் பெறுவது டவுன்லிங்கிங் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த செயற்கைக்கோள் விதிமுறைகளில் குறிப்பிடத்தக்க தளர்வு செய்ய இருப்பதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை செயலாளர் அபூர்வ சந்திரா தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி மாநாட்டில் பேசிய அவர், “இந்தியாவில் உள்ள 898 செயற்கைக்கோள் டிவி சேனல்களில் 532 சேனல்கள் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை பயன்படுத்தி அப்லிங்கிங், டவுன்லிங்கிங் செய்து வருகின்றன. இதற்கான வழிகாட்டு நெறிமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளன. இப்பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் நிறைவடையும்.

இதன் மூலம், சேட்டிலைட் டிவி சேனல் ஒளிபரப்பு துறையில் இந்தியா புதிய மையமாக மாறும். ஏற்கனவே, நேபாளம், இலங்கை, பூடான் போன்ற நாடுகள் இந்திய செயற்கைக்கோளை பயன்படுத்தி டிவி சேனல்களை ஒளிபரப்பி வருகின்றன, என்றார். இந்தியாவில் உள்ள பல சேனல்களும் சிங்கப்பூர் செயற்கைக்கோளை பயன்படுத்தி வருகின்றன. கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் பட்சத்தில், இந்திய செயற்கைக்கோள்களை டிவி சேனல்கள் அதிகம் பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம், வெளிநாட்டு செயற்கைக்கோள்களுக்கு செலுத்தப்படும் பணம் இந்திய செயற்கைகோள்களுக்கு கிடைக்கும். இத்துறையும் வளர்ச்சி அடையும் என்றார்.

Spread the love