பீஜிங், ஜன.14
கடந்த ஆண்டு இந்தியா சீனா நாடுகளிடையிலான வர்த்தகம் அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. சீன சுங்கத்துறை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2021ம் ஆண்டில், இந்தியா-சீனா இடையிலான வர்த்தகம் ரூ.10 லட்சத்து 25 ஆயிரம் கோடியாக இருந்தது. இந் நிலையில், 2022ம் ஆண்டில், இருநாட்டு வர்த்தகம் ரூ.11 லட்சத்து 15 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இது முன்எப்போதும் இல்லாத அளவாகும். இதன்மூலம் ஒரே ஆண்டில் வர்த்தகம் 8.4 சதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு இந்தியாவுக்கு சீனா மேற்கொண்ட ஏற்றுமதி ரூ.9 லட்சத்து 71 ஆயிரத்து 700 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 21.7 சதம் அதிகம்.
இந்தியாவிடம் இருந்து சீனா மேற்கொண்ட இறக்குமதி ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 300 கோடியாக குறைந்துள்ளது. மேலும், இது முந்தைய ஆண்டை விட 37.9 சதம் குறைவு. இந்தியா ஏற்றுமதி செய்ததை விட இறக்குமதி அதிகமாக செய்ததால், இந்தியா வர்த்தக பற்றாக்குறையை சந்தித்துள்ளது. இந்த வர்த்தக பற்றாக்குறை முதல்முறையாக 100 பில்லியன் டாலரை கடந்துள்ளது. வர்த்தக பற்றாக்குறை 101.02 பில்லியன் டாலர் ஆகும். 2021-ம் ஆண்டில் 69 பில்லியன் டாலர் மட்டுமே வர்த்தக பற்றாக்குறையாக இருந்தது. 2015ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை இந்தியா-சீனா இருதரப்பு வர்த்தகம் 75.30 சதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.