September 27, 2022

இந்தியா 7 சதம் பொருளாதார வளர்ச்சி காணும் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நம்பிக்கை

புது தில்லி, செப்.12

நடப்பாண்டு இந்தியா 7 சத பொருளாதார வளர்ச்சி காணும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்தார்.

அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக சவூதி அரேபியா சென்றுள்ளார். அந்நாட்டில் உள்ள இந்திய வம்சாவளியினரை சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில் சந்தித்து அவர் உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:

சவூதியில் உள்ள இந்திய வம்சாவளியினர் இந்தியாவின் பிம்பத்தை, சவூதி அரேபியர்கள் இந்தியா குறித்து என்ன நினைக்கின்றனர் என்பதை, இந்தியர்கள் யார் என்பதை பல வழிகளில் வடிவமைத்துள்ளனர்.

இந்திய வம்சாவளியினரின் சாதனைகள், பங்களிப்புகள், தொழில், நட்பு ஆகியவை இந்தியா குறித்த சவூதி அரேபியாவின் ஒட்டுமொத்த கண்ணோட்டத்தை கூட்டாக கட்டமைத்துள்ளன. இதற்காக இந்திய வம்சாவளியினருக்கு பாரத நாடு எப்போது நன்றிக்கடன்பட்டுள்ளது. தனது பொருளாதாரத்தை வளர்த்து, அதிக வருவாய் கொண்ட நாடாக மாறுவதற்கு சக்திவாய்ந்த முயற்சிகளை இந்தியா மேற்கொண்டது. அதற்கு முன்னோக்கிய பார்வையும், நிதி ஆதாரங்களை விவேகமான முறையில் நிர்வகிப்பதும் தேவைப்பட்டது.

கடந்த நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவாக 670 பில்லியன் டாலர்களை எட்டியது. சரக்கு வர்த்தகத்தின் மதிப்பு 400 பில்லியன் டாலர்களாக இருந்தது. இவற்றில் இருந்து அந்தச் சீர்திருத்தங்களின் விளைவுகளைக் காண முடியும். ர´யா-உக்ரைன் இடையிலான போரால் உணவு, எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை உயர்வு என பல சவால்களை உலகம் எதிர்கொண்டு வருகிறது. எனினும் இந்த ஆண்டு உலகிலேயே வேகமாக வளரும் பிரதான பொருளாதார நாடாக இந்தியா இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்தபட்சம் 7 சதமாக இருக்கும் என்றார் அவர்.

Spread the love