September 27, 2022

இந்தியா மற்றும் சீனாவுடன் உறவை மேம்படுத்தும்
வெளியுறவு கொள்கை: புதின் ஒப்புதல்

மாஸ்கோ, செப்.6

சீனா, இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளுடன் உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், தயாரிக்கப்பட்ட வெளியுறவு கொள்கைக்கு ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்தன. இந்தியா நடுநிலை வகித்தது. இதே போல் சீனா, மத்திய கிழக்கு நாடுகள், லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்நிலையில் ரஷ்யன் உலகம் என்ற பெயரில் தனது வெளியுறவு கொள்கையை ரஷ்யா தற்போது மாற்றி அமைத்துள்ளது. இதற்கு அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், இந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

ரஷ்ய உலகின் பாரம்பரியத்தையும் கொள்கைகளையும் ரஷ்யா பாதுகாக்க வேண்டும். வெளிநாடுகளில் வசிக்கும் ரஷ்யர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள், ரஷ்ய கலாச்சார அடையாளங்களை காக்க ரஷ்ய கூட்டமைப்பு ஆதரவு அளிக்கிறது. கடந்த 1991ம் ஆண்டு சோவியத் யூனியன் பிரிந்தது பூகோள அரசியல் பேரழிவு. முன்னாள் சோவியத் யூனியன் அமைதியை ரஷ்யா தொடர்ந்து மதிக்கிறது. இதை மேற்கத்திய நாடுகள் எதிர்க்கின்றன. சீனா, இந்தியா, மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடனான ஒத்துழைப்பை ரஷ்யா அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love