October 3, 2022

இந்தியா மற்றும் சீனாவில் ரூ.8 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு கொண்டவர்கள் எண்ணிக்கை உயரும் கிரெடிட் சுவிஸ் தகவல்

சூரிச், செப்.22

இந்தியாவில் கோடீஸ்வரர் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என கிரெடிட் சுவிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து கிரெடிட் சுவிஸ் நிறுவனம் வருடாந்திர உலக சொத்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு நிலவரப்படி உலக அளவில் 1 மில்லியன் டாலருக்கு (ரூ.8 கோடி) மேல் சொத்து மதிப்பைக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6.25 கோடியாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2026-ல் 8.75 கோடியாக உயரும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியா மற்றும் சீனாவில் ரூ.8 கோடிக்கு மேல்சொத்து மதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை அடுத்த நான்கு ஆண்டுகளில் 2 மடங்கு உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 நிலவரப்படி இந்தியாவில் 7.96 லட்சம் பேர் ரூ.8 கோடிக்கு மேல் சொத்து மதிப்பைக் கொண்டுள்ளனர். 2026ல் இந்த எண்ணிக்கை 105 சதம் அதிகரித்து 16.23 லட்சமாக இருக்கும் தெரிவித்துள்ளது. அதேபோல், சீனாவில் 2021 நிலவரப்படி 62 லட்சம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கை 2026-ல் 97 சதம் உயர்ந்து 1.2 கோடியாக உயரும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 2.4 கோடி கோடீஸ்வரர்கள் உள்ளனர்.2026-ல் அந்த எண்னிக்கை 2.7 கோடியாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடீஸ்வரர்களின் பட்டியலில் சீனா இரண்டாம் இடத்திலும், ஜப்பான் மூன்றாம் இடத்திலும், பிரிட்டன் நான்காம் இடத்திலும் உள்ளன. தற்போது உலக கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவின் பங்கு 40 சதமாக உள்ளது. இந்தியாவின் பங்கு 1 சதவீதமாக உள்ளது.

Spread the love