November 29, 2022

இந்தியா, சீனாவுடனான கடன் மறுசீரமைப்புபேச்சு வெற்றியடையும்: இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே

கொழும்பு, நவ.15

இந்தியா, சீனாவுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை வெற்றியடையும் என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் 2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையின்போது விக்ரமசிங்க தெரிவித்ததாவது:

கடந்த 1948ம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பின்னர் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டு வருகிறது. இந்த நெருக்கடியில் இருந்து இலங்கை பொருளாதாரம் வெளியேற பெரிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம். சர்வதேச நிதியம் முன்மொழிந்துள்ள சீர்திருத்தங்கள், இலங்கை பொருளாதாரத்தை நிலைத்து நிற்க வைப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்நிலையில், அந்த நிதியம் அறிவுறுத்தியதுபோல இந்தியா, சீனா என இலங்கைக்கு கடன் வழங்கிய அனைத்துத் தரப்பினரிடமும் கடன் மறுசீரமைப்பு குறித்து இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில், இலங்கைக்கு சாதகமான முடிவு எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், இந்த ஆண்டு தொடக்கத்தில் அந்நியச் செலாவணி பற்றாக்குறை காரணமாக இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக அங்கு அரசியல் குழப்பங்களும் ஏற்பட்டன. அந்நாட்டின் அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் எரிபொருள் தேவைக்கு இதுவரை 4 பில்லியன் டாலர்களை (சுமார் ரூ.32,400 கோடி) இந்தியா கடனாக அளித்துள்ளது.

Spread the love