December 8, 2022

இந்தியாவில் ‘ஹைப்பர்லூப் ரயிலை அறிமுகம் செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம்: நிதி ஆயோக்

புது தில்லி, நவ.19

இந்தியாவில், அதிவேக ரயில் பயணங்களுக்கான ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வது குறித்து, பல வெளிநாட்டு நிறுவனங்கள் மிகவும் ஆர்வமாக இருப்பதாக, நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அதிவேக ரயில் பயணங்களுக்கான ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை, இந்தியாவில் அறிமுகம் செய்ய, பல வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வமுடன் உள்ளன. சில நிறுவனங்களுடன் இதற்கான பேச்சு நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அவை ஆரம்பகட்ட நிலையில் உள்ளன என்று தெரிவித்தார்.

மேலும், இந்தியாவில் ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மிக அதிவேக ரயில்களை அறிமுகம் செய்வது குறித்து, ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் மற்றும் அதன் வர்த்தக வாய்ப்புகள் குறித்து ஆராயும் இந்த குழுவின் தலைவராக, சரஸ்வத் உள்ளார்.

ஹைப்பர்லூப் ரயில்கள், வெற்றிடமான ஒரு டியூப்பின் வாயிலாக விரைந்து செல்லக்கூடியவையாகும். இந்த தொழில்நுட்பத்தை உலகுக்கு முன்மொழிந்தவர் டெஸ்லா மற்றும் டுவிட்டர் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Spread the love