September 27, 2022

இந்தியாவில் வாடிக்கையாளர்கள் இன்றி 21 சதம் மால்கள் இயங்குகிறது: நைட் பிராங்க்

புது தில்லி, செப்.15

இந்தியாவில் செயல்படும் 271 வணிக வளாகங்களில் 21 சதம் அல்லது 57 மால்கள் வாடிக்கையாளர்களின் வருகையின்றி காற்று வாங்கிக் கொண்டிருப்பதாக சர்வதேச சொத்து ஆலோசனை நிறுவனமான நைட் பிராங்க் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள மால்கள் குறித்து நைட் பிராங்க் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இந்தியாவின் மொத்த மால்களின் பரப்பு 9.29 கோடி சதுரடியாக 271 மால்களில் 8 நகரங்களில் அமைந்துள்ளது. ஆமதாபாத், பெங்களூரு, சென்னை, ஐதராபாத், கோல்கட்டா, மும்பை, டில்லியின் என்.சி.ஆர்., மற்றும் புனே ஆகியவை மால்களின் சந்தையாக உள்ளன. இதில் கிட்டத்தட்ட 57 மால்கள் வாடிக்கையாளர்களின் வருகையின்றி காற்று வாங்குகின்றன. இந்த மால்களின் மொத்த குத்தகை பரப்பு 84 லட்சம் சதுரடியாக உள்ளது.

இதில் பெரும் பகுதி டில்லி, குருகிராம் மற்றும் நொய்டாவில் அமைந்துள்ளன. அங்கு இவ்வாறு காற்று வாங்கும் வணிக வளாகங்களின் பரப்பு 33.5 லட்சம் சதுர அடியாக உள்ளது. மக்கள்தொகை மற்றும் என்ன தேவை என்பது பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் இந்த தொழிலில் குதித்த டெவலப்பர்கள் தற்போது கவலையில் உள்ளனர். பெங்களூரு இத்தகைய காற்று வாங்கும் மால்களின் அளவு 13.8 லட்சம் சதுரடி, ஐதராபாத்தில் 11.4 லட்சம் சதுரடி, மும்பையில் 11.3 லட்சம் சதுரடியாக உள்ளன. சென்னையில்ம் 3.3 லட்சம் சதுரடி இவ்வாறு உள்ளன. புனே, ஆமதாபாத், கோல்கட்டாவிலும் காற்று வாங்கும் மால்கள் ஆக்கிரமித்துள்ள அளவு சுமார் 3 லட்சம் சதுரடிக்கு மேல் உள்ளது.

இந்த மால்களை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்காததற்கு காரணம், மால் நிர்வாகத்தினர் சரியான நடவடிக்கை எடுக்காதது, அளவு மற்றும் கடைகளின் உரிமை முறைகளில் குறைபாடுகள், வடிவமைப்பு சிக்கல்கள், இருண்ட சந்துகள் கொண்ட தளங்கள், வாடிக்கையாளர்கள் நடப்பதற்கான இடப் பற்றாக்குறை, முக்கிய கடைகள் வராதது ஆகியவை இந்த மால்கள் காற்று வாங்க காரணமாக இருக்கின்றன. 2022ல் மூன்றில் ஒரு பங்கு மால்களின் பரப்பு டில்லி தலைநகர் பகுதியில் அமைந்துள்ளது. இது மால்களுக்கான டாப் 8 சந்தையில் அதிகபட்சமாகும். அதற்கடுத்தப்படியாக 18% பரப்பை மும்பையும், 17 சதவீத பரப்பை சென்னையும் கொண்டுள்ளன. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love