October 2, 2022

இந்தியாவில் டிமேட் கணக்கு எண்ணிக்கை 10 கோடியை தாண்டி புதிய சாதனை

புது தில்லி, செப்.6

இந்தியாவில் டிமேட் கணக்குகளின் எண்ணிக்கை, 10 கோடியைத் தாண்டி, புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஒரு வங்கியில் பணம் சேமிப்பதற்கு, எப்படி நமக்கு ஒரு கணக்கு தேவைப்படுகிறதோ, அதே போல, பங்குச் சந்தையில் பங்குகளை வாங்க – விற்க, டிமேட் கணக்கு தேவைப்படும். முன்பெல்லாம் ஒரு நிறுவனத்தின் பங்கை நாம் வாங்கினால், அதற்கு அடையாளமாக, ஷேர் சர்ட்டிபிகேட் கொடுப்பர். இந்த சான்றிதழை கொடுப்பதிலும், பெறுவதிலும், பலவிதமான அசவுகரியங்கள் இருந்தன.

மேலும், இந்த சான்றிதழ்கள் காகிதத்தில் அச்சிடப்பட்டவை என்பதால், தொலைந்து போகவோ அல்லது கிழிந்து போகவோ வாய்ப்புண்டு. இது போன்ற பிரச்னைகளை தவிர்க்கும் வகையில், மின்னணு வடிவில் பங்குகளை இருப்பில் வைத்துக்கொள்ளும் வசதி அறிமுகம் ஆனது. பங்குகளை மின்னணு வடிவில் நாம் இருப்பில் வைத்துக்கொள்வதற்கான கணக்கு தான், டிமேட் கணக்கு. மேலும், பங்குச் சந்தையில் சில்லரை முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, டிமேட் கணக்குகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், இந்த எண்ணிக்கை, கடந்த ஆகஸ்டில், சாதனை அளவாக 10 கோடியை தாண்டி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும், பங்குச் சந்தை முதலீடு குறித்து, சில்லரை முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்து வருவதன் அடையாளமே இது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Spread the love