November 29, 2022

இந்தியாவில் ஐபோன் 14 தயாரிப்பு
பெகாட்ரான் நிறுவனம் களமிறங்கியது

புது தில்லி, நவ.5

இந்தியாவில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 தயாரிப்பில், பெகராட்ரான் நிறுவனம் களம் இறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கவும், தாக்கம் உள்ள பகுதிகளில் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. அவற்றில் ஜென்ஜோ நகரமும் ஒன்று. இங்கு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தின் மிகப்பெரிய ஆலையும் உள்ளது. சீன அரசின் தடை உத்தரவால், இந்த ஆலையும் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தட்டுப்பாட்டை சமாளிக்கும் விதமாக, தைவானைச் சேர்ந்த இன்னொரு ஒப்பந்த நிறுவனமான ‘பெகாட்ரான்’ நிறுவனம், இந்தியாவில், ஐபோன் 14 தயாரிப்பு பணியை துவக்கி உள்ளது. இந்தியாவில், கடந்த செப்டம்பர் முதல், பாக்ஸ்கான் நிறுவனம், ஐபோன் 14 தயாரிப்பை துவங்கியது. தற்போது இரண்டாவதாக, பெகாட்ரான் நிறுவனமும், இந்தியாவில் ஐபோன் 14 தயாரிப்பில் இறங்கி உள்ளது. ஐபோன் தயாரிப்பில் சீனாவை பெரிதும் நம்பி இருக்கும் ஆப்பிள் நிறுவனம், தன்னுடைய கவனத்தை இந்தியாவின் பக்கம் திருப்பி வருகிறது.

மேலும், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஒப்பந்த நிறுவனங்களாக, பாக்ஸ்கான், விஸ்ட்ரான், பெகாட்ரான்’ ஆகிய மூன்று நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love