December 9, 2022

இந்தியாவில் அடுத்தப் பத்து ஆண்டுகளில் எரிசக்தித் துறை
70,000 கோடி டாலர் முதலீடு உருவாக வாய்ப்பு: மோர்கன் ஸ்டான்லி

புது தில்லி, நவ.3

உலகின் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், வரும் 2030க்குள் இந்தியா 3வது இடத்துக்கு முன்னேறும் என்று சர்வதேச முதலீட்டு வங்கி மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.

இது குறித்து மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளதாவது. இந்தியாவின் உற்பத்தித் துறை மற்றும் எரிசக்தித் துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடும் மேம்பட்ட டிஜிட்டல் கட்டமைப்பும் இந்தியாவை 2030ம் ஆண்டுக்குள் பொருளாதார ரீதியாக 3வது பெரிய நாடாக நிலைபெறச் செய்யும் என்று தெரிவித்துள்ளது. சர்வதேச நிறுவனங்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. வெளிநாட்டு வேலைகளை இந்தியாவிலிருந்து செய்பவர்களின் எண்ணிக்கை அடுத்த 10 ஆண்டுகளில் இரு மடங்காக உயரும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவின் தனிநபர் வருமானம் 2,278 டாலராக உள்ளது. 2031-ல் இது 5,242 டாலராகஉயரும். நாட்டின் ஜிடிபியில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு 2031-ல் 21 சதவீதமாக உயரும். சர்வதேச ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு 4.5 சதவீதமாக இருக்கும். இந்தியாவின் தனிநபர் வருவாய் உயர்வு, இளைஞர்களின் எண்ணிக்கை, தீவிர நகர்மயமாக்கல் ஆகியவை காரணமாகவும் 2030-ல் ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் இருக்கும்.

பெட்ரோல், டீசல், நிலக்கரி பயன்பாட்டிலிருந்து மாற்று எரிசக்தி பயன்பாட்டை நோக்கி இந்தியா வேகமாக நகர்ந்து வருகிற நிலையில் அடுத்தப் பத்து ஆண்டுகளில் எரிசக்தித் துறை சார்ந்து 70,000 கோடி டாலர் (ரூ.58லட்சம் கோடி) முதலீடு உருவாகவாய்ப்புள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love