December 9, 2022

இந்தியாவின் மூலதனச் சந்தையில் தொழில்நுட்பங்களின்
பயன்பாடு அதிகரிப்பு: செபி தலைவர் தகவல்

பெங்களூரு, அக்.29

தொழில்நுட்பங்களின் உதவியுடன் வாடிக்கையாளரின் பங்குகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதில், இந்தியாவைப் போல எந்த நாடும் செயல்படவில்லை என செபி தலைவர் மாதவி புரி புச் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் 49வது நிறுவன தின நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின் மூலதனச் சந்தையில் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது என்றார்.

இந்தியாவைப் போல எந்தவொரு நாடும் தொழில்நுட்பங்களின் உதவியுடன் வாடிக்கையாளர்களின் பங்குகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதில்லை. நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடானது மூலதனச் சந்தையின் செயல்பாட்டைத் திறன்மிக்கதாக்கியுள்ளது. அதன் காரணமாக அந்நிய முதலீட்டாளர்களின் வருகை அதிகரித்துள்ளது.

மேலும், பங்கு வர்த்தக விவகாரத்தில் முறைகேடுகளைத் தடுப்பதற்காக நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய தொழில்நுட்பங்கள் முதலீட்டாளர்களின் முதலீட்டு நடைமுறைகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. மூலதனச் சந்தையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காகத் தரவுகளை செபி சிறப்பான முறையில் பயன்படுத்தி வருகிறது. பங்குச் சந்தையில் பங்கேற்கும் முதலீட்டாளர்கள் அனைவரும் விதிகளை முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்வதிலும் தொழில்நுட்பங்கள் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன. நாட்டில் செயல்பட்டு வரும் 44 பரஸ்பர நிதி அமைப்புகளின் தரவுகளையும் செபி தொடர்ந்து சேகரித்து வருகிறது. மேலும், தேசிய பங்குச் சந்தையிலும், மும்பை பங்குச் சந்தையிலும் இணையவழி குற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்றார்.

Spread the love