October 3, 2022

இந்தியாவின் நடப்பு நிதியாண்டுக்கான வளர்ச்சிக் கணிப்பை குறைத்தது மூடிஸ்

புது தில்லி, செப்.2

இந்தியாவின் நடப்பு ஆண்டுக்கான வளர்ச்சிக் கணிப்பை, மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ்’ நிறுவனம், குறைத்து அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதற்கு முன், நடப்பாண்டில் நாட்டின் வளர்ச்சி 8.8 சதமாக இருக்கும் என, கடந்த மே மாதத்தில், அறிவித்திருந்த நிலையில், இப்போது 7.7 சதமாக குறைத்து அறிவித்துள்ளது.
இது குறித்து மூடிஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2021ல், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.3 சதமாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் 7.7 சதமாக குறையும். மேலும், 2023ல் வளர்ச்சி 5.2 சதமாக குறையும். வட்டி விகித உயர்வு, சீரற்ற பருவமழை, உலக பொருளாதார வளர்ச்சி சரிவு ஆகியவை காரணமாக, இந்தியாவின் வளர்ச்சி வேகம் தடைபடும். வட்டி விகித அதிகரிப்பு, டிசம்பர் காலாண்டில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், அடுத்த ஆண்டிலும் பாதிப்பு நீடிக்கும்.பணவீக்கம் மிகப் பெரிய சவாலாக இருக்கும். பணவீக்க அழுத்தத்தை குறைக்க, ரிசர்வ் வங்கி, தன்னுடைய பணக் கொள்கையில் இறுக்கமான நிலைப்பாட்டை மேற்கொள்ளும். இவ்வாறு மூடிஸ் தெரிவித்துள்ளது.

Spread the love