December 8, 2022

இந்தியன் ரயில்வே 2023ம் ஆண்டு மார்ச்சுக்குள் புதிதாக 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்க திட்டம்

புது தில்லி, நவ.3

இந்திய ரயில்வே வரும் 2023ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் புதிதாக 25 வந்தே பாரத் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது:

புதிய வந்தே பாரத் விரைவு ரயில்கள், வேகம், பாதுகாப்பு மற்றும் பயணிகளிக்குச் சிறந்த பயணத்தை அளிக்கும் வகையில் இயக்கப்படவிருக்கின்றன. மேலும், இந்த நிதியாண்டில் மட்டும், சென்னையில் உள்ள ரயில் பெட்டிகள் தயாரிப்புத் தொழிற்சாலையில் 27 வந்தே பாரத் விரைவு ரயில்களைத் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், ஏற்கனவே இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கத்தைத் தொடங்கிவிட்டன.

மூன்றாவது ரயில், சென்னை – மைசூரு இடையே பெங்களூரு வழியாக இயக்கப்படவிருப்பதாகத் தெரிகிறது. முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட, இருக்கைகள் அமைக்கப்பட்ட இந்த ரயில்கள், மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

சர்வதேச தரம் வாய்ந்த பயண அனுபவத்தையும் விமானத்தில் பயணிப்பது போன்ற அனுபவத்தையும் “வந்தே பாரத் ரயில் பயணிகளுக்கு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளைக் கொண்ட வந்தே பாரத் ரயிலில் தானியங்கி கதவுகள், தானியங்கி விளக்குகள், கைப்பேசி சார்ஜ் செய்யும் வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள், நவீன இருக்கைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love