November 29, 2022

இந்தியன் ஆயில் டேங்கின் பங்கை வாங்க அதானி நிறுவனம் ஒப்பந்தம்

சென்னை, நவ.11

அதானி போர்ட்ஸ் நிறுவனம், இந்தியன் ஆயில்டேங்கிங் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பானது ரூ.1050 கோடியாகும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியன் ஆயில்டேங்கிங் லிமிடெட் நிறுவனத்தின், 49.38% பங்கினை அதானி குழுமம் வாங்கவுள்ளது.

அதானியின் அதானி போர்ட்ஸ் நிறுவனம், நாட்டின் மிகப்பெரிய திரவ சேமிப்பு வசதிகளை கொண்டுள்ள நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில்டேங்கிங் லிமிடெட் நிறுவனத்தின், துணை நிறுவனமான (71.57% பங்கினை கொண்டுள்ள நிறுவனம்), ஐஓடி உட்கல் எனர்ஜி சர்வீசஸ் ஆகும். இந்த நிறுவனத்திலும் கூடுதலாக 10% பங்குகளை வாங்கும் என்பதும், இந்த ஒப்பந்தத்தில் அடங்கும் என அதானி குழுமம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 26 ஆண்டுகளில் இந்தியன் ஆயில்டேங்கிங் நிறுவனம் சுத்திகரிக்கப்பட்ட முழுமையான பெட்ரோலிய பொருட்களை சேமிப்பதற்காக ஐந்து மாநிலங்களில் 6 டெர்மினல்களை கொண்டுள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்துடனான பூட் முனையம் பாரதீப்பில் (ஒடிசாவில்) உள்ளது. இது தவிர இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் உடனான செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு ஒப்பந்தங்கள் ஜேஎன்பிடி (மகராஷ்டிரா) மற்றும் குஜராத்தில் டுமாட் ஆகியவையும் அடங்கும். இந்த நிறுவனம் தமிழகத்தில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பயோ கேஸ் ஆலை ஒன்றையும் கொண்டுள்ளது. இதில் ஒரு நாளைக்கு 15 டன் உற்பத்தி திறனையும் கொண்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்திலும் அதானியின் முதலீடு வந்துள்ளது எனலாம்.

இந்த பங்கு வாங்குவது குறித்து அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், முழு நேர இயக்குனருமான கரண் அதானி தெரிவித்துள்ளதாவது: இந்த ஒப்பந்தத்தின் மூலம் நிறுவனத்தின் சேமிப்பு திறன் என்பது 200% அதிகரித்து, 3.6 மில்லியன் கிலோ லிட்டர்களாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் அதானி மூன்றாவது பெரிய திரவ சேமிப்பு நிறுவனமாக மாறியுள்ளது. இது உலகளவில் மிகப்பெரிய போக்குவரத்து பயன்பாடாக மாறுவதற்கான, எங்கள் லட்சியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Spread the love