December 8, 2022

இட்டாநாகர் தோன்யி போலோ
முதல் பசுமை விமான நிலையத்தை
பிரதமர் மோடி திறந்து வைத்தார்

PM at Arunachal Pradesh’s first greenfield airport, Donyi Polo Airport ,in Itanagar on November 19, 2022.

இட்டாநகர், நவ.19

பிரதமர் நரேந்திர மோடி, இட்டாநகரில் உள்ள தோன்யி போலோ விமான நிலையத்தை திறந்து வைத்ததுடன், 600 மெகாவாட் கமெங் புனல் மின் நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், அருணாச்சலப் பிரதேசத்திற்கு அடிக்கடி வந்து சென்றதை நினைவு கூர்ந்தார், அருணாச்சலப் பிரதேச மக்கள் தங்கள் மாநிலத்தின் வளர்ச்சியில் காட்டும் அர்ப்பணிப்பைப் பாராட்டினார். மாநில மக்களின் மகிழ்ச்சியான, ஒழுக்கமான பண்புகளையும் அவர் சுட்டிக்காட்டினார். அடிக்கல் நாட்டும் திட்டங்களை தாமே நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பாரம்பரியத்தை நடத்திக் காட்டி வரும் பிரதமர், மாறுபட்ட பணி கலாச்சாரமே இதற்கு காரணம் என்று கூறினார். விமான நிலையம் அடிக்கல் நாட்டப்பட்ட போது, இது ஒரு தேர்தல் நேர தந்திரம் என்று விமர்சித்தவர்களுக்கு இந்த விமான நிலையம் திறப்பு மூலம் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். அரசியல் விமர்சகர்கள் புதிய சிந்தனையுடன் எதையும் அணுக வேண்டும் என்றும், மாநிலத்தின் வளர்ச்சியை அரசியல் ஆதாயங்களைக் கொண்டு பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். மாநிலத்தில் இப்போது தேர்தல் நடக்கவில்லை என்று கூறிய அவர், மாநிலத்தில் எதிர்காலத் தேர்தல் எதுவும் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். மாநிலத்தின் வளர்ச்சியே அரசின் முன்னுரிமை என்று கூறிய பிரதமர், “நான் சூரியன் உதிக்கும் மாநிலத்தில் இன்றைய நாளைத் தொடங்குகிறேன், இந்தியாவில் சூரியன் மறையும் போது டாமனில் இருப்பேன், இடையில் காசிக்கும் செல்கிறேன்” என்று கூறினார்.

சுற்றுலா, வர்த்தகம், தொலைத்தொடர்பு, ஜவுளி என எந்த துறையாக இருந்தாலும் வடகிழக்கு தற்போது முதலிடம் பெறுகிறது, என்று பிரதமர் குறிப்பிட்டார். ட்ரோன் தொழில்நுட்பம், விமானப் போக்குவரத்து மூலம் விவசாய உற்பத்தியை எளிதாக்க்கி ஊக்குவிக்கும் கிரி´ உடான் திட்டம், விமான நிலைய இணைப்பு, துறைமுக இணைப்பு என எதுவாக இருந்தாலும், வடகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை அளித்துள்ளது. இந்தியாவின் மிக நீளமான பாலம், மிக நீளமான ரயில் பாலம், ரயில் பாதை இணைப்பு, நெடுஞ்சாலைகளின் சாதனை கட்டுமானம் ஆகியவற்றை உதாரணங்களாக பிரதமர் எடுத்துக்காட்டினார். இது எதிர்பார்ப்புகள் மற்றும் அபிலாஷைகளின் புதிய சகாப்தம், இந்தியாவின் புதிய அணுகுமுறைக்கு இன்றைய நிகழ்ச்சி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று பிரதமர் விளக்கினார்.

தோன்யி போலோ விமான நிலையம் அருணாச்சலப் பிரதேசத்தின் நான்காவது செயல்பாட்டு விமான நிலையமாக இருக்கும் என்று பிரதமர் கூறினார். இதன் மூலம் வடகிழக்கு பிராந்தியத்தில் மொத்த விமான நிலையங்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. கடந்த எட்டு வருடங்களில் மட்டும் இப்பகுதியில் 7 விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் உள்ள விமான நிலையங்களின் விரைவான வளர்ச்சி, வடகிழக்கில் இணைப்பை மேம்படுத்துவதில் பிரதமரின் சிறப்பு முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. வடகிழக்கு இந்தியாவை இணைக்கும் விமானங்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். “தோன்யி போலோ விமான நிலையம் அருணாச்சல பிரதேசத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரத்திற்கு சாட்சியாக மாறி வருகிறது” என்று திரு மோடி குறிப்பிட்டார்.

தொலைதூர மற்றும் அணுக முடியாத பகுதிகளில் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு அருணாச்சலப் பிரதேசத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடு கண்டுள்ளது என்று சுட்டிக்காட்டிய பிரதமர், அருணாச்சலப் பிரதேசத்தின் இயற்கை அழகு, சுற்றுலாவுக்கான அதிக வாய்ப்புகளைக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார். மாநிலத்தின் தொலைதூரப் பகுதிகளுக்கு முறையான இணைப்பு தேவை என்பதை வலியுறுத்திய அவர், மாநிலத்தில் உள்ள 85 சதவீத கிராமங்கள் பிரதமரின் கிராம சாலைத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். புதிய விமான நிலைய உள்கட்டமைப்பு, மேம்பாட்டுடன் சரக்கு சேவைத் துறையில் மிகப்பெரிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று பிரதமர் தெரிவித்தார். இதன் விளைவாக, மாநில விவசாயிகள் இப்போது தங்கள் விளைபொருட்களை பெரிய சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்க முடியும். மாநிலத்தில் பிரதமர் கிசான் நிதியின் பலனை விவசாயிகள் அனுபவித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், மாநிலத்தில் ஒவ்வொரு கிராமத்திற்கும், வீட்டுக்கும் வளர்ச்சியை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான பணி முறையில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்று திரு மோடி குறிப்பிட்டார். எல்லைக் கிராமத் திட்டத்தின் கீழ் அனைத்து எல்லைக் கிராமங்களையும் மேம்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளையும் அவர் விளக்கினார். இது சுற்றுலாத்துறைக்கு ஊக்கமளிப்பதுடன், பிராந்தியத்தில் இடம்பெயர்ந்து செல்வதைக் குறைக்கும் என்றார் அவர். இளைஞர்களை என்.சி.சி.யுடன் இணைக்கும் சிறப்புத் திட்டம் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது இளைஞர்களுக்கு பாதுகாப்புப் பயிற்சி அளிப்பதுடன் மட்டுமின்றி நாட்டுக்கு சேவை செய்யும் உணர்வைத் தூண்டும் என்றும் அவர் தெரிவித்தார். “ அனைவரது முயற்சியுடன் இணைந்த மாநிலத்தின் இரட்டை எந்திர அரசு அருணாச்சலப் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு உறுதிபூண்டுள்ளது என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

Spread the love