February 3, 2023

ஆர்பிஐயின் டிஜிட்டல் ரூபாய் சோதனை அறிமுகம்
மாற்றத்துக்கான சிறந்த திட்டமாகும்: எஸ்பிஐ தலைவர்

புது தில்லி, டிச.5

ஆர்பிஐயின் டிஜிட்டல் ரூபாய்க்கான சோதனை முயற்சிகள், மாற்றத்துக்கான சிறந்த திட்டமாகும் என, எஸ்பிஐ தலைவர் தினேஷ் காரா தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஆர்பிஐ, சோதனை முயற்சியாக சில்லரை பரிவர்த்தனைகளுக்கான டிஜிட்டல் ரூபாயை மும்பை, புதுடில்லி, பெங்களூரு, புவனேஸ்வர் ஆகிய நான்கு நகரங்களில் அறிமுகம் செய்துள்ளது. துவக்கத்தில், குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் மட்டுமே இதை பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆர்பிஐயின் சில்லரை பரிவர்த்தனைகளுக்கான டிஜிட்டல் ரூபாய் சோதனை முயற்சிகள், ஒரு பெரும் மாற்றத்துக்கான திட்டமாகும். இது மிகவும் குறைந்த செலவில், சிறந்த பணப் பரிமாற்றத்தை உறுதி செய்யும். டிஜிட்டல் ரூபாய், தற்போது நடைமுறையில் உள்ள நாணய கட்டமைப்பு முறையுடன் இசைந்து போவதாகவும்; மேலும் பல புதுமைகளை படைக்கும் விதமாகவும் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும், சில்லரை பிரிவில், டிஜிட்டல் ரூபாய், இரண்டாவது கட்டமாக, மேலும் ஒன்பது நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love