December 9, 2022

ஆனையூர் பகுதியில் மழையால் பாதிப்பினை குறித்து
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் ஆய்வு

மதுரை, நவ.5

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆனையூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, கன மழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான சில பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சர் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆனையூர், சங்கீத் நகர், செல்லையா நகர், பல்லவி நகர், ஆபிசர்ஸ் டவுன், ஆர்.ஆர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு பொது மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். மேலும், பொதுமக்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் நலனுக்காக உடனடி தீர்வாக சாலைகளை சீர் செய்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் வசிக்கும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் பாதாள சாக்கடை வசதியும், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் சிரமமின்றி செல்வதற்கு தற்காலிகமாக சாலையை சீர் செய்திட கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கைகளை ஏற்று உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மழைக்காலம் முடிந்த பின்னர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இப்பகுதிகளில் நிரந்தர தார்சாலை அமைப்பதற்கும்இ பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொடர்ந்து மழை பெய்து வருவதால் நோய்த் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துப் பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

Spread the love