புது தில்லி, ஜன.18
ஆந்திரா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை சாகர் சிமெண்ட்ஸ் கையகப்படுத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து விரிவான செய்தியாவது: கடந்த 2012-ஆம் ஆண்டு டன்கன் கோயங்கா குழுமத்திடம் இருந்து ஆந்திரா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை ஜேபீ குழுமம் கைப்பற்றியது. தற்போது கடன்சுமையில் உள்ள ஆந்திரா சிமெண்டஸ் நிறுவனத்தை வாங்க டால்மியா சிமெண்ட் (பாரத்), சாகர் சிமெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இடையே போட்டி நிலவியது.
இந்நிலையில், பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியமான செபியிடம் ஆந்திரா சிமெண்ட்ஸ் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில், ஆந்திரா சிமெண்ட்ஸை கையகப்படுத்தும் திட்டத்தை சாகர் சிமெண்ட்ஸ் சமர்ப்பித்திருந்தது. அந்தத் திட்டத்துக்கு ஆந்திரா சிமெண்ட்ஸின் கடன் அளிப்போர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு கடிதம் சாகர் சிமெண்டஸிடம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா சிமெண்ட்ஸை சாகர் சிமெண்ட்ஸ் கையகப்படுத்துவதற்கான ஏலத்தொகை ஆவணத்தில் குறிப்பிடப்படவில்லை.