September 27, 2022

ஆதிதிராவிடர், பழங்குடியினரை சார்ந்தவர்கள் சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க அரசாணை

நாமக்கல், செப்.20

ஆதிதிராவிடர், பழங்குடியினரை சார்ந்தவர்கள் சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க அரசாணை வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்துள்ளதாவது:

அரசாணையில் 2022-2023ம் ஆண்டு புதிய அறிவிப்பு எண்.12 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரின் அறிவிப்பில் 100-ல் 80 ஆதிதிராவிடர் மற்றும் 20 பழங்குடியினர் மக்களுக்கும், ஒரு நபருக்கு ரூ.3.00 லட்சம் என்ற வீதத்தில் 100 நபர்களுக்கு திட்டத்தொகை 3.00 கோடி என்றும் இதில் பயனாளி பங்குத்தொகை ரூ.15.00 லட்சமும் மானியம் ரூ.90.00 லட்சமும் வங்கிக்கடன் ரூ.195.00 லட்சம் என்று குறிப்பிட்டு சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க ஒதுக்கீடு செய்து அரசாணை வரப்பெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்திற்கு 2 ஆதிதிராவிடர்களுக்கு மானியம் ரூ.1,80,000/- லட்சமும் மற்றும் பழங்குடியினர் 1 நபருக்கு தலா ரூ.90,000/- இலக்கு நிர்ணயித்து அரசாணை வரப்பெற்றுள்ளது. இதற்கான நிபந்தனைகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும். வயது வரம்பு 18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 3 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். தாட்கோ திட்டத்தில் இதுவரை மானியம் பெற்றிருக்க கூடாது. தாட்கோ மாவட்ட அளவிலான தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்த விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்பட்ட பின் சிமெண்ட் முகவருக்கான விண்ணப்பங்கள் டான்செம் நிறுவனம் மூலம் பெற்று வழங்கப்படும். விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரருக்கு தாட்கோ மூலம் ரூ.5,000/- வைப்புத்தொகை டான்செம் நிறுவனத்திற்கு செலுத்தப்படும். சிமெண்ட் விற்பனை தொடர்பான விளம்பரம் செய்வதற்கு தேவையான சிற்றேடு பிரசுரங்கள் மற்றும் பெயர் பலகை ஆகியவை டான்செம் நிறுவனம் மூலம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் பயனாளிகள் http://application.tahdco.com/ என்ற இணையதளத்திலும் மற்றும் பழங்குடியினர் http://fast.tahdco.com/ என்ற இணையதளத்திலும் பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love