புது தில்லி, நவ.25
ஆதார் அட்டையை எந்த வடிவில் வழங்கினாலும், அடையாளமாக ஏற்கும் முன்பு அதனை தீவிரமாக பரிசோதிக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையமான (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது. ஆதார் அட்டை, இ-ஆதார், ஆதார் பிவிசி அட்டை மற்றும் எம் ஆதார் என எந்த வடிவில் ஆதார் அட்டை வழங்கப்பட்டாலும் அதன் உண்மை தன்மையை பரிசோதித்து உறுதி செய்யவேண்டும் என தெரிவித்துள்ளது. சமூக விரோதிகள் 12 இலக்க எண்கள் கொண்ட ஆதார் அட்டையை தவறுதலாக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆதார் எண் என தனிநபர் வழங்கும் 12 இலக்க எண்ணை அப்படியே ஏற்கக்கூடாது. ஆதார் அட்டையை தனிநபரின் அடையாளமாக வழங்கப்படும் போது, அந்த எண்ணை பயன்படுத்துவதற்கு முன்பு அதன் உண்மைத் தன்மையை பரிசோதித்து அறியவேண்டியது அவசியம் என அனைத்து மாநில அரசுகளுக்கும் யுஐடிஏஐ அறிவுறுத்தியுள்ளது. எம்-ஆதார் செயலி, ஆதார் க்யூ ஆர் கோட் ஸ்கேனர் ஆகியவற்றின் மூலம் ஆன்டராய்டு வசதியை பயன்படுத்தி தீவிரமாக பரிசோதிக்க வேண்டும்.