November 29, 2022

ஆட்டோமேசன் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி
மான்ஸ்டர் இந்தியா ஆய்வறிக்கை தகவல்

புது தில்லி, நவ.9

வங்கி, நிதிச் சேவைகள், இன்சூரன்ஸ் மற்றும் தொலைதொடர்பு சேவை ஆகிய துறைகளில், பணியமர்த்தும் நடவடிக்கைகள், கடந்த அக்டோபரில் சரிவைக் கண்டுள்ளதாக, மான்ஸ்டர் இந்தியா வின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து அந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இன்சூரன்ஸ் மற்றும் தொலைதொடர்பு சேவை ஆகிய துறைகளில் உள்ள வேலைகளில், பணியமர்த்துவது அக்டோபரில், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, 6 சத சரிவை கண்டுள்ளது என தெரிவித்துள்ளது.

உலக பொருளாதார நிலையின் காரணமாக, இந்த துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்கள், பணியமர்த்துவதில் எச்சரிக்கை உணர்வுடன் நடந்து வருவதை அடுத்து, குறியீட்டில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், முந்தைய செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, 5 சதவீத சரிவு காணப்பட்டு உள்ளது.

வளர்ந்த நாடுகளில், பொருளாதார மந்தநிலை குறித்த அச்சம் அதிகரித்துள்ளதும், இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இருப்பினும், ‘ஆட்டோமேசன்’ துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்பட்டுள்ளது. இப்பிரிவில் வேலைவாய்ப்பு 34 சதம் அதிகரித்துள்ளது. இதற்கு, நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தி மற்றும் செயல்திறனை அதிகரிக்க, தொழில்நுட்பங்களை அதிகம் பயன்படுத்த துவங்கி இருப்பதே காரணம் என, மான்ஸ்டர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love