October 3, 2022

ஆகஸ்டில் வேலையின்மை விகிதம்
8.3 சதமாக அதிகரிப்பு: சிஎம்ஐஇ தகவல்

புது தில்லி, செப்.3

நாட்டில் ஆகஸ்ட் மாதத்தில் வேலையின்மை விகிதம் 8.3 சதமாக அதிகரித்துள்ளது; என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்நிறுவனத்தின் தரவுகளின்படி, கடந்த ஜூலையில் 6.8 சதமாக இருந்த வேலையின்மை விகிதம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 8.3 சதமாக அதிகரித்துள்ளது. வேலை கிடைக்கப் பெற்றோர் எண்ணிக்கை 39.70 கோடியிலிருந்து 39.46 கோடியாக குறைந்துள்ளது. சுமார் 20 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர் என அந்த தரவுகளில் தெரியவந்துள்ளது.

இது குறித்து, சிஎம்ஐஇ நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மகேஷ் வியாஸ் தெரிவிக்கையில், ஆகஸ்டில் நகர்ப்புற வேலையின்மை விகிதம் 9.6 சதமாகவும் கிராமப்புற வேலையின்மை விகிதம் 7.7 சதமாகவும் அதிகரித்தது. தொடர் மழையால் பயிர் விதைப்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவே கிராமப்புறங்களில் வேலையின்மை அதிகரிக்க முக்கிய காரணம்’ என்றார் அவர். மேலும், ஆகஸ்ட் மாதத்தைப் பொருத்தவரை, ஹரியாணாவில் அதிகபட்சமாக வேலையின்மை விகிதம் 37.3 சதமாக இருந்தது. அடுத்த இடங்களில் ஜம்மு-காஷ்மீர் (32.8%), ராஜஸ்தான் (31.4%), ஜார்க்கண்ட் (17.3%), திரிபுரா (16.3%) ஆகிய மாநிலங்கள் உள்ளன. வேலையின்மை விகிதம் குறைவாக உள்ள மாநிலங்களில் சத்தீஸ்கர் (0.4%) முதலிடத்தில் உள்ளது. மேகாலயம் (2%), மகாராஷ்டிரம் (2.2%), குஜராத் (2.6%), ஒடிஸா (2.6%) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாக சிஎம்ஐஇ தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love