October 4, 2022

ஆகஸ்டில் ஏற்றுமதி 1.15 சதம் சரிவு

புது தில்லி, செப்.5

நாட்டின் ஏற்றுமதி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 1.15 சதம் சரிந்து ரூ. 2,60,700 கோடி அளவிலும், வணிக பற்றாக்குறை இரண்டு மடங்குக்கு மேலாக அதிகரித்து ரூ. 2,26,572 கோடி அளவிலும் இருந்தது தெரியவந்துள்ளது.

மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்ட முதல்கட்ட புள்ளிவிவரங்களில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

வணிகப் பற்றாக்குறை கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில் ரூ.92,509 கோடியாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு மடங்குக்கு மேலாக அதிகரித்து ரூ. 2,26,572 கோடியாக உள்ளது. இறக்குமதி 37 சதம் அதிகரித்து ரூ. 4,87,272 கோடிக்கு செய்யப்பட்டுள்ளது. 2022-23ம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான கால கட்டத்தில் ஏற்றுமதி 17.12 சதம் வளர்ச்சி பெற்று ரூ. 15,21,461 கோடி அளவில் செய்யப்பட்டுள்ளது. அதே நேரம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி 1.15 சதம் சரிந்து ரூ. 2,60,700 கோடி அளவில் இருந்தது. இறக்குமதியைப் பொருத்தவரை இதே 5 மாத காலத்தில் 45.64 சதவீதம் அதிகரித்து ரூ. 29,37,299 கோடிக்கு செய்யப்பட்டுள்ளது.

வணிகப் பற்றாக்குறை இந்த 5 மாத காலத்தில் ரூ. 9,89,238 கோடி அளவுக்கு பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 4,24,862 கோடியாக பதிவானது. எண்ணெய் இறக்குமதி ஆகஸ்ட் மாதத்தில் 86.44 சதம் அதிகரித்து ரூ. 1,39,040 கோடிக்கு செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதும், தங்க இறக்குமதி 47.54 சதம் சரிந்து ரூ. 27,729 கோடிக்கு செய்யப்பட்டுள்ளது என அந்த புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love