September 27, 2022

அரசு பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்

விருதுநகர், பிப்.9

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் காரியாபட்டி ஒன்றியத்தில்; அரசு பள்ளிகளில் பயின்று வரும் தனித்திறமை வாய்ந்த 20 பள்ளி மாணவ மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் உயர்ந்த லட்சியத்திற்கு வழிகாட்டும் விதமாகவும் ஊக்கப்படுத்தும் விதமாகவும் அவர்களின் திறமைகளை பாராட்டும் விதமாகவும் நடைபெற்ற காபி வித் கலெக்டர் என்ற 5வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி மற்றும் தேர்தல் பார்வையாளர் எஸ்.பாலசந்தர் ஆகியோர்கள் மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசு பள்ளி மாணவ மாணவிகளிடம் மாவட்ட ஆட்சியர் அவர்களுடைய லட்சியம் அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் அவர்களுக்கு பிடித்த விளையாட்டு வீரர்கள் அவர்களுடைய பொழுதுபோக்கு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.

மாணவர்கள் வாழ்க்கையில் உங்கள் இலக்கை அடைவதற்கு உங்களுடைய பின்புலம் ஒரு பொருட்டல்;ல. தமிழகத்தில் உழைப்பை மட்டுமே நம்பி ஐ.ஏ.எஸ் ஆனவர்கள் அதிகம் உள்ளனர். அதேபோல் எந்த தொழிலும் ஒன்றுக்கொன்று குறைந்தது இல்லை. மருத்துவருடைய பணி உயிர் காப்பது. ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியுடைய பணி மற்றவர்களுடைய வாழ்வை மேம்படுத்துவது. எனவே படிப்பு ஒன்று மட்டுமே நம்மை ஒரு பெரிய உயரத்திற்கு எடுத்து செல்ல முடியும். மாணவர்கள் தற்போது பள்ளி கல்வி பயிலும் போதே தங்களுக்கென்று ஒரு தெளிவான இலக்கை வகுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அந்த இலக்கை அடைவதற்கு கடின உழைப்பு ஒருபோதும் வீண்போகாது என்பதற்கேற்ப ஒவ்வொரு நாளும் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்றும் மேலும் நீங்கள் உங்களுக்கென்று தனித்திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். நிறைய திறமைகள் உதாரணமாக எழுத்து வாசிப்பு பேச்சு திறமை தமிழ் ஆங்கிலம் ஹிந்தி உள்ளிட்ட உங்களுக்கு விருப்பமான மொழிகளை தேர்ந்தெடுத்து அதில் புலமை பெற வேண்டும். வாழ்க்கையில் தொடர்ந்து நீங்கள் உங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் இது உங்களை முழுமைபடுத்தும் என்றும் இந்த திறமைகளை கொண்டு பல நபர்களுக்கு உதவ முடியும் என்றும் கூறினார்.

Spread the love