September 27, 2022

அரசுப்பள்ளி மாணவர்களின் சாதனைகள்
விருதுநகர் ஆட்சியர் பாராட்டு

விருதுநகர், பிப்.10

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் யோகா மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்கள் குஜராத்தில் நடைபெறவுள்ள தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாடு போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவிகள் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.

அதன்படி வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப்பள்ளியில் 11 ம் வகுப்பு பயிலும் டால்வின் ராஜூ என்ற மாணவன் யோகா போட்டியில் யோக நித்ரா என்ற நிலையில் நாற்காலியில் மீது 17 நிமிடங்கள் யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 4 நிமிடம் செய்ததே உலக சாதனையாக இருந்தது. வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப்பள்ளியில் பயிலும் கே.ஜெ.ஜெகன்நாத் என்ற மாணவன் தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய உலகப் பொதுமறை திருக்குறள் போட்டியில் 1330 திருக்குறளையும் சிறப்பாக ஒப்பித்து சாதனை படைத்துள்ளார்.

மேலும் குஜராத்தில் நடைபெறவுள்ள தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாட்டில் நடைபெறும் போட்டியில் நாராணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவிகள் முத்து முனீஸ்வரி மற்றும் கோகிலா ஆகியோர் அழியும் கலைகள் என்ற தலைப்பில் சிலம்பத்தை பற்றியும் 10-ம் வகுப்பு பயிலும் மாணவிகள் சிவானி மற்றும் ஸ்ரீநிதி ஆகியோர் மருத்துவ கழிவுகளும் அதன் விளைவுகளும் என்ற தலைப்பிலும் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேற்குறிப்பிட்ட மாணவ மாணவிகள்; மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர். சாதனைகள் புரிந்த மற்றும் தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாட்டில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ள மாணவ மாணவிகளை பாராட்டி மென்மேலும் சாதனைகள் மற்றும் வெற்றிகள் புரிய ஆட்சியர் ஊக்கப்படுத்தினார்.

Spread the love