December 8, 2022

அனைத்து பொருள்களுக்கும் ஒரே ஜிஎஸ்டி வரி விகிதம்
பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் வலியுறுத்தல்

புது தில்லி, நவ.8

அனைத்து பொருள்களுக்கும் ஒரே சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்பட வேண்டுமெனப் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் விவேக் தேவ்ராய் வலியுறுத்தியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளதாவது:

மத்திய, மாநில அரசுகளின் மொத்த ஜிஎஸ்டி வருவாயானது மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் வெறும் 15 சதமாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான அரசின் செலவினம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சரக்கு-சேவை வரியானது அனைத்து பொருள்களுக்கும் ஒரே விகிதமாக அமல்படுத்தப்பட வேண்டும். அதேபோல், எந்தப் பொருள்களுக்கும் வரி விலக்கு வழங்கப்படக் கூடாது. வரி விலக்கு காரணமாக ஜிடிபி-யில் 5 முதல் 5.5 சதம் வரையில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

மேலும், வரி விலக்குகள் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. விலக்குகள் ஏதுமற்ற வரி விதிப்பு நடைமுறையை அமல்படுத்துவது தொடர்பாகவும் சிந்திக்க வேண்டும். பல அங்கீகரிக்கப்படாத தொழில் நிறுவனங்கள் தனிநபர் வருமானப் பிரிவில் வரியைச் செலுத்தி வருகின்றன. எனவே, தனிநபர் வருமான வரிக்கும் பெருநிறுவன வரிக்கும் இடையிலான செயற்கை வேறுபாடு களையப்பட வேண்டும். இது நிர்வாக சிக்கல்களைக் குறைக்கும் என்றார்.

மேலும், இவையனைத்தும் தனிப்பட்ட கருத்து மட்டுமே. இதை பொருளாதார ஆலோசனைக் குழுவின் பரிந்துரையாகக் கருதக் கூடாது. ஆனால், நாட்டில் ஒரே ஜிஎஸ்டி விகிதம் எப்போதுமே அமலாகாது என நினைக்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

Spread the love