October 4, 2022

அந்நியச் செலாவணி கையிருப்பு
55,087 கோடி டாலராக சரிவு: ஆர்பிஐ

மும்பை, செப்.19

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த செப்.9ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 55,087.1 கோடி டாலராக சரிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஆர்பிஐ வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த செப். 9ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 223.4 கோடி டாலர் வீழ்ச்சியடைந்து 55,087.1 கோடி டாலராக இருந்தது. இது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.43,87,715.06 கோடியாகும்.

இதற்கு முன்னதாக, கடந்த ஆக. 26ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 300.7 கோடி டாலர் சரிந்து 56,104.6 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி சொத்து மதிப்பும் (எஃப்சிஏ) தங்கத்தின் கையிருப்பும் கணிசமான அளவில் குறைந்ததன் காரணமாகவே, அந்நிய செலாவணி கையிருப்பு சரிவைச் சந்தித்துள்ளது.

குறிப்பாக, செப். 9ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் எஃப்சிஏ 251.9 கோடி டாலர் சரிந்து 48,959.8 கோடி டாலராக இருந்தது. அதேபோல், தங்கத்தின் கையிருப்பும் 34 கோடி டாலர் குறைந்து கோடி டாலராக காணப்பட்டது. மதிப்பீட்டு வாரத்தில், பன்னாட்டு நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமமான எஸ்டிஆர் 6.3 கோடி டாலர் வீழ்ச்சியடைந்து 1,771.9 கோடி டாலராகவும், பன்னாட்டு நிதியத்தில் நாட்டின் இருப்பு நிலை 80 லட்சம் டாலர் சரிந்து 491 கோடி டாலராகவும் இருந்தது என ஆர்பிஐ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Spread the love