October 4, 2022

அதானி குழுமம் சிமென்ட் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க திட்டம்: கௌதம் அதானி

மும்பை, செப்.20

அதானி குழுமம் சிமென்ட் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க உள்ளதாக அக்குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: அம்புஜா சிமென்ட்ஸ், ஏசிசி ஆகிய இரு சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகளைச் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஹோல்சிம்மின் குழுமத்திடம் இருந்து அதானி குழுமம் வாங்கியது. இதன் மூலம் நாட்டின் 2வது பெரிய சிமென்ட் உற்பத்தி நிறுவனமாக அதானி குழுமம் திகழ்கிறது.

இது குறித்து கௌதம் அதானி தெரிவித்துள்ளதாவது: இந்தியா பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக வளர்ச்சி காணும் வேளையில், நாங்கள் கட்டுமானத்துறையில் அடியயடுத்து வைக்கிறோம். இந்தியா சிமென்ட் உற்பத்தியில் 2வது இடத்தில் உள்ளது. ஆனால், சீனாவின் தனிநபர் நுகர்வு 1,600 கிலோ உடன் ஒப்பிடும் போது இந்தியாவின் தனிநபர் நுகர்வு 250 கிலோவாக உள்ளது. அரசின் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளதால், நீண்ட கால அடிப்படையில் சிமென்ட்டுக்கான மொத்த தேவை உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 1.2 மடங்கு முதல் 1.5 வரையில் உயரலாம். தயாரிப்பில் செயல்திறனை கொண்டு வருவதின் மூலம் குறிப்பிட்ட அளவிலான சிமென்ட் தயாரிப்பு அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

இதன் மூலம் நாட்டின் லாபகரமான சிமென்ட் உற்பத்தியாளராக விளங்க செய்யும். தற்போதைய 7 கோடி டன் உற்பத்தியிலிருந்து அடுத்த 5 ஆண்டுகளில், 14 கோடி டன்னாக உயர்த்துவது குறித்து நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

Spread the love