November 29, 2022

அடுத்த 5 ஆண்டுகளில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும் டெக் மஹிந்திரா

பெங்களூரு, நவ.5

உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையினால் பல்வேறு ஐடி நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வருகின்றனர். மேலும் புதிதாக வேலைக்கு சேருமாறு ஆணை வழங்கப்பட்ட பலரையும் நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில், அடுத்து வரப்போகும் ஐந்து ஆண்டுகளில் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் சார்பாக கிட்டத்தட்ட 20,000 பணியாளர்களை புதியதாக பணியமர்த்தும் திட்டத்தில் இருப்பதாக நிறுவனத்தின் சிஇஓ குர்நாணி சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது: அடுத்த ஐந்து வருடங்களில் புதியதாக 20000 பணியாளர்கள் எங்கள் நிறுவனத்தில் பணியமர்த்தபடுவார்கள். ஏற்கனவே 1,64,000 பணியாளர்கள் எங்கள் நிறுவனத்தில் பணியில் இருக்கிறார்கள். இதனை 1,84,000 ஆக மாற்ற முயற்சி செய்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 5877 பணியாளர்களை அந்நிறுவனம் புதியதாக வேலையில் அமர்த்தி உள்ளது. அதற்கு முன் ஜூன் மாதத்தில் 6862 எண்ணிக்கையிலான பணியாளர்களை புதியதாக சேர்த்துள்ளது. தற்போது வரை 16912 என்ற எண்ணிக்கையில் பணியாளர்கள் டெக் மஹிந்திரா நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். மேலும் டெக் மஹிந்திரா நிறுவனத்தை பொருத்தவரை வேலை இழப்பு என்பது கடந்த வருடங்களை விட மிகவும் குறைந்துள்ளதாகவே இருக்கிறது. இதற்கு முன்னர் நடந்த காலாண்டில் 22 சதமாக இருந்த வேலை இழப்பானது தற்போது 20 சதமாக சரிந்துள்ளது. எதிர்காலத்தில் ஏற்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்களையும், உலகெங்கிலும் ஏற்படும் திறன் மேம்பாட்டுகளுக்கும் ஏற்ற வகையில் நாங்கள் ஆட்களை திட்டமிட்டு நியமித்து வருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். கடந்த நிதியாண்டில் மட்டும் 10,000 பேரை புதியதாக பணியமர்த்தியுள்ள அந்நிறுவனம், நடப்பு நிதியாண்டிலும் முடிந்தளவு அதிக பணியாளர்களை நியமிப்பதற்கான வேலைகளை செய்து வருவதாக தெரிவித்துள்ளது.

Spread the love