December 9, 2022

அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் மேலும் 100 மருத்துவ கல்லூரிகள்: மத்திய அரசு

புது தில்லி, நவ.14

நாடு முழுவதும் அடுத்த 5 ஆண்டுகளில் புதிதாக 100 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது: மத்திய அரசு சுகாதார மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதன்படி, நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வருகிறது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் புதிய மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன.

ஏற்கனவே, 3 கட்டங்களாக 157 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், 93 கல்லூரிகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. மேலும், மற்ற கல்லூரிகள் கட்டப்பட்டு முடியும் நிலையில் இருக்கின்றன. இவை விரைவில் செயல்பாட்டு வரும் என தெரிகிறது. இந்நிலையில், 4ம் கட்டமாக 2027ம் ஆண்டுக்குள் மேலும் 100 மருத்துவ கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. இதன்படி, அரசு அல்லது தனியார் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத 100 மாவட்டங்களில் உள்ள மாவட்ட மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டு, மருத்துவக் கல்லூரிகளாக தரம் உயர்த்தப்படும் அல்லது நிபுணர் குழுவால் பரிந்துரை செய்யப்படும் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரியாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாவட்ட மருத்துவமனை அல்லது மருத்துவமனையை மருத்துவக் கல்லூரியாக மாற்ற ரூ.325 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது. இதில் மத்திய அரசு 60 சத நிதியும், மாநில அரசு 40 சத நிதியும் வழங்குகின்றன. இந்த தொகைக்கு மத்திய செலவின நிதிக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

Spread the love