October 3, 2022

அடுத்த 4 மாதங்களில் கிராமப் பகுதிகளில் 300 பொதுத்துறை வங்கிக் கிளைகள்

புது தில்லி, செப்.5

அடுத்த 4 மாதங்களில், அதாவது இந்த ஆண்டு இறுதிக்குள் வங்கிச் சேவை இல்லாத கிராமப் பகுதிகளில் 300 பொதுத்துறை வங்கிக் கிளைகளைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: அனைவருக்கும் நிதி சார்ந்த சேவைகள் கிடைக்கப்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 3,000க்கு மேல் மக்கள்தொகை உள்ள கிராமங்களில் இந்த வங்கிக் கிளைகள் தொடங்கப்படும். இதில் அதிகபட்சமாக ராஜஸ்தானில் 95 கிளைகள் திறக்கப்படவுள்ளன. இதற்கு அடுத்து மத்திய பிரதேசத்தில் 54, குஜராத்தில் 38, மகாராஷ்டிரத்தில் 33, ஜார்க்கண்டில் 32, உத்தர பிரதேசத்தில் 31 கிளைகள் அமைய உள்ளன. கடந்த மாதம் நடைபெற்ற பொதுத்துறை வங்கித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதில் அதிகபட்சமாக பரோடா வங்கி 76 கிளைகளைத் திறக்க இருக்கிறது. இதற்கு அடுத்து எஸ்பிஐ 60 கிளைகளைத் திறக்கவுள்ளது. அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கும் ஜன் தன் யோஜனா திட்டம் ஏற்கெனவே அமலில் உள்ளது. அத்திட்டம் தொடங்கப்பட்ட 2014 ஆகஸ்ட் 28 முதல் இப்போது வரை 46 கோடிக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் ரூ.1.74 லட்சம் கோடி இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் கிராமப் பகுதிகளில் 67 சத பெண்களும், இடைநிலை நகரங்களில் 56 சத பெண்களும் வங்கிக் கணக்கு தொடங்கியுள்ளனர்.

Spread the love