January 28, 2023

அடுத்த சிலமாதங்களில் பணவீக்கம் குறைந்து
நாடு சீரான வளர்ச்சியை எட்டும்: நிதியமைச்சகம்

புது தில்லி, நவ.25

கார் பருவ பயிர்கள் சந்தைக்கு வரத்தொடங்கியுள்ளதால், அடுத்த சில மாதங்களில் பணவீக்கம் குறைந்து, வரும் ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் சீரான வளர்ச்சியடையும் என மத்திய நிதியமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அக்டோபர் மாதத்துக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், சர்வதேச அளவில் பணவீக்க அதிகரிப்பு, பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்டவை சர்வதேச பொருளாதார மந்தநிலை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்க மத்திய வங்கி மேலும் வட்டி விகிதங்களை உயர்த்தினால், அது சர்வதேச அளவில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும். சர்வதேச சூழலால் இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனினும், உள்நாட்டில் வேளாண் பொருள்களுக்கான தேவை அதிகரித்துக் காணப்படுகிறது. நாட்டின் நிதிநிலைமை ஸ்திரத்தன்மையுடன் உள்ளதோடு முதலீடுகளும் அதிகரித்து வருகின்றன என தெரிவித்துள்ளது.

மேலும், சர்வதேச பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டிருந்தாலும், வரும் ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் சீராக வளர்ச்சி காணும் என கணிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் தென்மேற்குப் பருவமழை பொழிவு குறைவு, வெப்பஅலை உள்ளிட்டவற்றின் காரணமாக உணவுப் பொருள்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டது. எனினும், உணவு தானியங்களின் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டதால், அவை உள்நாட்டில் எளிதாகக் கிடைத்தன. பல்வேறு துறைகள் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதால், ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு சூழல் மேம்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதிக் கணக்குகளின் எண்ணிக்கை செப்டம்பரில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love